விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் குழந்தையின் பிறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவி மற்றும் குழந்தையை உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கிராமச்சாவடித் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (37), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி கனகா(25). இவர்களுக்கு கார்த்திகா (4) என்ற மகளும், சிவச்சந்திரன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சரவணன் தனது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் படுத்துத் தூங்கினார். தனி அறையில் படுத்திருந்த கனகா, குழந்தை சிவச்சந்திரன் ஆகியோர் மீது திடீரென தீப்பற்றியது.
இதில் தீக்காயமடைந்த கனகா, குழந்தை சிவச்சந்திரன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை சிவசந்திரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைக்காக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனகா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். நிகழ்விடத்துக்கு கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. கோமதி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சரவணன், கனகா இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவுபெறாததால், கோட்டாட்சியர் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே சந்தேகத்தின் பேரில், கனகாவின் கணவர் சரவணனிடம் கள்ளக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்றது அவர் தான் என்பது தெரிய வந்தது.
சரவணன் கொடுத்த வாக்குமூலம்….
மாற்றுத்திறனாளியான தன்னால், வெளியே அதிகமாக செல்லமுடியவில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி கனகா அவ்வப்போது வெளியே சென்று விட்டு வெகுநேரம் கழித்து வருவார்.
கேட்டால், கோயிலுக்குச் சென்றதாகக் கூறுவார். இதனால், எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கனகாவுக்கு இரண்டாவது குழந்தை ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை வெள்ளை நிறத்தில் இருப்பதால் பிறப்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனால், கனகாவையும், இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தையையும் கொல்ல திட்டமிட்டேன். அதற்காக, பெட்ரோல் வாங்கி வைத்து, இரவு படுத்துத் தூங்கிய போது, கனகாவையும், குழந்தையும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, மகள் கார்த்திகாவை தூக்கிக்கொண்டு வெளியே சென்று விட்டேன் என்று வாக்குமூலத்தில் சரவணன் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றி, சரவணனை நேற்று போலீசார் கைது செய்தனர்.