வட கொரிய வெளியுறவு அமைச்சர் ஸ்வீடனில் மேற்கொண்டுள்ளன பயணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னர் இப்பயணம் நடந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் பரஸ்பர கவலையளிக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜாங்-ஹோ பயணம் மேற்கொண்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் சமரசம் செய்யும் மிக நீண்ட வரலாற்றை ஸ்வீடன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, வட கொரிய அமைச்சரின் இந்த ஸ்வீடன் பயணம், அமெரிக்க வட கொரிய சந்திப்பிற்கு தயாரிப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற ஊகத்தை தூண்டியுள்ளது.
பல மாதங்களாக இரு தலைவர்களும் மிரட்டல்களையும், கேலிகளையும் மாறிமாறி பரிமாறி கொண்ட பின்னர், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதை கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டு ஆச்சரியமளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதை தென் கொரியா வழியாக தெரிவித்த பின்னர், வட கொரியாவிடம் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
பேச்சுவார்த்தையின் முக்கிய நாடுகள் இந்த பிரச்சனையில் ஸ்வீடன் பங்காற்ற வேண்டும் என்று விரும்பினால், அதற்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வன் தெரிவித்திருக்கிறார்.
ஸ்டாக்கோமில் சந்திப்பு நடைபெறுவதை அறிய வந்துள்ளதாகவும், இது அமெரிக்க – வட கொரிய சந்திப்பு தொடர்பானதா என தெரியாது என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு பற்றி வட கொரியாவின் நேரடி அறிவிப்பை எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ஹீதர் நௌரெட் தெரிவித்திருக்கிறார்.