கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
ட்ரம்ப் ஜுனியரை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி வனேஸ்ஸா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவியான இவானா ட்ரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் ட்ரம்ப், ஜூனியர் தொலைக்காட்சி பிரபலமாகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.
ட்ரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜான் ட்ரம்ப் கடந்த 2005 ஆம் ஆண்டு மொடலான வனேஸ்ஸாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஜான் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று தம்பதிகள் இருவரும் மனம் ஒத்து 12 ஆண்டுகள் மணவாழ்க்கையை முறித்துக்கொண்டு அவரவர் வழியில் பயணிக்க இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நீதி மன்றில் வனேஸ்ஸா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் ஐந்து குழந்தைகள் மற்றும் ட்ரம்ப் ஜூனியரின் சொத்துக்களை உரிமை கோரப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஐந்து குழந்தைகளும் ட்ரம்ப் வசம் வளரும் என கூறப்படுகிறது.
எனினும் இது தொடர்பாக வெள்ளை மாளிகையோ அல்லது ட்ரம்ப் நிறுவனமோ உத்தியோக பூர்வமாக எது வித கருத்தும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
’இரான் அணு ஆயுதங்கள் தயாரிக்குமானால் நாங்களும் தயாரிப்போம்’
தன்னுடைய போட்டி நாடாக விளங்குகின்ற இரான் அணு ஆயுதங்கள் தயாரிக்குமானால், தாங்களும் தயாரிக்க தொடங்குவோம் என்று சௌதி அரேபியா தெரிவித்திருக்கிறது.
சௌதி அரேபியா அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை என்று அமெரிக்க நிறுவனமாக சிபிஎஸ் நியூஸிடம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்திருக்கிறார்.
“ஆனால், இரான் அணு குண்டு தயாரிக்குமானால், உடனடியாக சௌதி அரேபியாவும் தயாரிக்கும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அரசு படைகளின் முன்னேற்றம்: கிழக்கு கூட்டாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
சிரியாவின் அரசு படைப்பிரிவுகள் முன்னேறி வருவதால், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸூக்கு வெளியே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டா பகுதியில் இருந்து 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தப்பி சென்றுள்ளனர்.
சமீப நாட்களில் தீவிர தாக்குதலுக்கு உள்ளான ஹடௌரியா நகரத்தில் இருந்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் படுக்கை விரிப்புக்களோடும், பைகளோடும் இந்த நகரை விட்டு வெளியேறுவதை காண முடிந்தது.
கடந்த மாதம் இந்தப்பகுதியை கைப்பற்றுவதற்காக ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர், இந்த இடத்தில் இருந்து அதிக மக்கள் வெளியேறியிருப்பது இதுவே முதல்முறை.
அதேவேளையில், உதவி பொருட்களை ஏற்றிக்கொண்டு 25 லாரிகள் ஹடௌரியா நகருக்குள் சென்றுள்ளன.
ஆட்சி கவிழ்ப்பால் பாதிக்கப்பட்டதாக முகாபே குமுறல்
தான் ஆட்சி கவிழ்ப்பால் பாதிக்கப்பட்டவர் என்று ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தன்னுடைய ஆட்சியில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இவர், இதுவரை காத்து வந்த அமைதியை இந்த அறிக்கை மூலம் கலைத்திருக்கிறார்.
ராணுவத்தின் ஆதரவு இல்லாமல், தனக்கு பின்னர் ஆட்சி பொறுப்பேற்றுள்ள எமர்சன் முனங்காக்வா, அதிபராக ஆகியிருக்க முடியாது என்று தென் ஆஃப்ரிக்க ஒளிபரப்பு நிறுவனமான எஸ்எபிசியிடம் முகாபே கூறியுள்ளார்.
போலீஸ் கொடூரத்திற்கு எதிரான பெண் அரசியில்வாதிக்கு இறுதிச்சடங்கு
போலீஸ் கொடூரத்திற்கு எதிராக பரப்புரை செய்துவந்த பெண் அரசியல்வாதி ஒருவருக்கு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
பிரேசிலின் பல நகரங்களில் இரவு விழிப்பு பிரார்த்தனைகளும், ஆர்பாட்டப் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை இரவு மரில்லே ஃபிரான்கோவின் காரை பின்தொடர்ந்து வந்த துப்பாக்கிதாரி ஒருவர் அவரை பல முறை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
ரியோ மாநிலத்தில் படைப்பிரிவுகளை நிறுத்துவதை கண்காணிப்பதற்கு 38 வயதான இந்த அரசியல்வாதிக்கு சமீபத்தில்தான் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.