“வங்கி மோசடிக்கும் பா.ஜ.க அரசுக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது” என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க நாடு முழுவதும் தங்களது ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்தாலும் சமீபத்தில் நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இது அக்கட்சியின் பக்கம் தோல்வி அலை வீசத் தொடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. வங்கி மோசடிக்கும் பா.ஜ.க-வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான ஒரு பொருளாதாரக் கொள்கையை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் வாங்கியக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாத மத்திய பா.ஜ.க அரசு நிரவ் மோடிக்கு கடன் கொடுத்திருக்கிறது. மத்திய அரசு முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு எதிராக உள்ளது.
மோடி நினைத்தால் காவிரி மேலாண்மையை 24 மணி நேரத்தில் அமைத்துவிட முடியும். காவிரி நீர் தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மோடி கருத்தில் கொள்ளமாட்டார். பெட்ரோல் மற்றும் ரசாயன மண்டலமாகத் தமிழகத்தைப் பெரும் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இவற்றை எதிர்த்து, வருகின்ற 5-ம் தேதி முதல் கடலூர் தொடங்கி தஞ்சாவூர் வரை 6 மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட இருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரும். அதேபோல தமிழகத்தின் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து டெல்லி சென்று மோடியின் வீடு மற்றும் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்” என்று தெரிவித்தார்.