வியர்க்குரு, உடல் உஷ்ணம், வெப்ப மயக்கம்… தவிர்ப்பது எப்படி?

`கோடை’ என்றதும் மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், வெயிலோடு விளையாடி, வியர்வையில் குளித்து ஆட்டம் போட்ட காலமெல்லாம்  மாறிப்போய்விட்டது. கிராமங்களில் கிணறுகளிலும், குளம் – கண்மாய்களிலும், ஆறு – அருவி போன்ற நீர் நிலைகளிலும் குளித்த காலத்தை, `பொற்காலம்’ என்றே சொல்லலாம்.  இன்றைக்கு வெயிலுக்குப் பயந்து, வீட்டையும் குளிரூட்டப்பட்ட அறைகளையும்விட்டு வெளியே தலைகாட்டாமல் வாழ்கிறோம். எப்படியிருந்தாலும், நாம்  வெயிலை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது! வெயிலைச் சமாளித்து, உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள சில வழிமுறைகள்.

கோடைகாலம்

“வெயிலில் அதிக நேரம் வேலை செய்தாலோ, நடந்து சென்றாலோ சிலருக்கு மயக்கம் ஏற்படுவது இயல்பு. இந்தப் பிரச்னையுள்ளவர்கள், இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். முதியவர்கள், குழந்தைகள், உடல் நலம் குன்றியவர்களும் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு `ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat stroke) எனப்படும் வெப்ப மயக்கம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. வெயிலில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கையோடு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். பயணத்தின்போது இளநீர், நுங்கு, கூழ், நீராகாரம், மோர் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை அடிக்கடி அருந்தினால் கோடையை எளிதாக எதிர்கொள்ளலாம்.

வெப்ப மயக்கம் ஏற்பட்டவரை, குளிர்ச்சியான, நிழலான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அவருடைய ஆடைகளைத் தளர்த்தி, உடல் முழுக்கக் காற்றுப்படும்படி செய்ய வேண்டும். தண்ணீரில் நனைத்த துணியால், அவர் உடல் முழுவதும் ஒற்றி எடுத்து, துடைக்க வேண்டும். அவருக்கு இளநீர், நுங்கு, குளுக்கோஸ் போன்றவற்றைப் பருகக் கொடுத்தால் உடனடியாக மயக்கம் தெளியும். அதன் பிறகு மருத்துவரை அணுகி, அது வெப்ப மயக்கமா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வியர்க்குரு

வெப்பத்தின் காரணமாக சிலருக்கு வியர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும். கோடையில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை பனை நுங்கு. இதை வியர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்தால் அதன் தீவிரம் குறையும். நுங்கு கிடைக்காதவர்கள் சந்தனம், சோற்றுக்கற்றாழைச் சாற்றினை உடலில் பூசிக்கொள்ளலாம். சோற்றுக்கற்றாழை, கோடையின் வரப்பிரசாதம். வாரத்துக்கு மூன்று நாள்கள் சோற்றுக் கற்றாழைச் சாறு அருந்தினால் வியர்க்குரு பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாகத் தணிய அது உதவும்.
சோற்றுக்கற்றாழைச்  சாறு தயாரிப்பது எப்படி?
சோற்றுக்கற்றாழை  –  30 – 45 மி.லி
எலுமிச்சைப்பழச் சாறு  – 2 டீஸ்பூன்
இஞ்சிச் சாறு    –  1 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை  – தேவைக்கேற்ப.
மேலே சொன்னவற்றை ஒரு டம்ளர்  மண்பானைத் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

மண்பானை

உடல் உஷ்ணம் குறைக்கும் வழிமுறைகள்…

இன்றையச் சூழலில் இயல்பாகவே பலருக்கும் உடல் உஷ்ணம் அதிகரித்துவருகிறது. எனவே இதைக் குறைக்க கோடையில், உணவில் வெந்தயத்தை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மணத்தக்காளிக்கீரை, வெங்காயம், சௌ சௌ, வெள்ளரி, தர்பூசணி, வெண்பூசணி மற்றும் கொடி வகைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட்டாலும்  உஷ்ணம் தணியும். திராட்சைப்பழத்துக்கு உஷ்ணத்தைத் தணிக்கும் ஆற்றல் உண்டு. உடலுக்குக் குளிர்ச்சி உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கக்கூடியது. ஐஸ் வாட்டருக்குப் பதிலாக, செம்புப் பானை அல்லது மண்பானை நீர் அருந்துவது சிறந்தது. இவற்றுடன் வாரத்துக்கு ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் செய்வது உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.

கோடைகால நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

வெயில் காலத்தில் சில குழந்தைகளுக்கு உடலில் கட்டி, அம்மை, அக்கி போன்ற நோய்கள் ஏற்படும். அம்மை நோய் கண்டவர்களுக்கு செந்தாழம்பூ சிறந்த மருந்து. இந்தப் பூக்களின் மடல்களை இடித்து, நீரில்போட்டு நன்றாகச் சுண்டும்படி காய்ச்ச வேண்டும். சூடு ஆறியதும் காலை, மாலை இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், அம்மை நோய் கட்டுப்படும்.
உஷ்ணத்தால் வரும் அக்கி நோய்க்கு வெண்தாமரைப்பூ கஷாயம் நல்லது. வெண்தாமரைப்பூவைக் கஷாயமாக்கி காலை, மாலை இருவேளை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட உஷ்ணம் நீங்கி அக்கி நோய் தணியும். பசலைக்கீரையை அரைத்து பசு வெண்ணையில் குழைத்து அக்கியின் மேல் தடவினாலும் அதன் தீவிரம் குறையும். மஞ்சள், வேப்பிலை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியவை. குறிப்பாக வீட்டில் அரைத்த மஞ்சள் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

கற்றாழைச் சாறு

உணவில் கவனம்!

கோடையில் தொற்றுநோய்க் கிருமிகள் அதிகமாக இருக்கும். அவற்றிலும் உணவு, தண்ணீர் வழியாகப் பரவும் தொற்றுநோய்கள்தான் அதிகமிருக்கும். சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாது. எனவே, எண்ணெயில் பொரித்த, வறுத்த, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், க்ரீம் நிறைந்த பேக்கரி நொறுக்குத்தீனிகள், பர்கர், பீட்சா, ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமானமாகும் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

கட்டி, கண் எரிச்சல் நீங்க…

கண் எரிச்சலைப் போக்க வில்வப் பழம் சிறந்த மருந்து. வில்வப் பழத்தை நெருப்பில் சுட்டு,  அதன் உள்ளே இருக்கும் விழுதை தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல் குறையும். குளிர்ந்த நீரை பருத்தித் துணியில் நனைத்து, கண்களில் பட்டியாகப் போடலாம். இயற்கையுடன் விளையாடி மண் குளியல் போடலாம்.

வெப்பத்தின் கடுமையை எதிர்கொள்ள…

வாழைப்பழத்தை மசித்து அதில் பால் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவ வேண்டும். ரோஸ் வாட்டரில் பால் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதைக்கொண்டு கழுவி வர அதிக வெப்பத்தால் ஏற்பட்ட கருமை நிறம் மறையும். கோடையின் சிறப்பே மாம்பழம்தான். அதை, பாலுடன் சேர்த்து சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர, கருமை நிறம் மாறி சருமம் இயல்பான நிறத்துக்குத் திரும்பும்.

நன்னாரி

கோடை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள 10 ஆலோசனைகள்:

1)    மண்பானை அல்லது செம்புப் பானை நீரை குடிக்கப் பயன்படுத்த வேண்டும்.
2)    பழச் சாறு, இளநீர், நுங்கு போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3)    கேழ்வரகு கூழ், கம்பங் கூழ் ஆகியவற்றை மோருடன் கலந்து பருக வேண்டும். .
4)    அசைவ உணவுகளையும், கார உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், பழங்களையே பயன்படுத்த வேண்டும்.
5)    பயணத்தின்போது தேவையான உணவு, தண்ணீர், பழச் சாறுகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
6)    காலையும் மாலையும் நீரில் மூழ்கி, நன்றாக உடலைத் தேய்த்து அதைக் குளிர்விக்கும்படி குளிக்க வேண்டும்.
7)    சூரியனுக்குப் பயந்து சன் பிளாக் க்ரீம்களை  (Sun Block Cream) பயன்படுத்தக் கூடாது. கறுப்பு நிறமில்லாத குடைகளைப்    பயன்படுத்தலாம்.
8)    மண் குளியல் உடலைக் குளிர்விக்கும். வாரத்துக்கு ஒருமுறையாவது இந்தக் குளியலை மேற்கொள்ளலாம். தினமும் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
9)    தளர்வான வெளிர் நிறத்திலிருக்கும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
10)     மூளைக்குச் சிறிது விடுமுறை கொடுத்து, அருகிலுள்ள வயல்வெளி, கடற்கரை, பூங்கா, தோப்பு… என  இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களுக்குச் சென்று வர வேண்டும்.