அம்பாறை பிரதேசத்தில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகள் உணவில் கலந்து விற்பனை செய்யப்பட்டன என்ற கருத்து முற்றிலும் பொய்யானது.
நாட்டின் அமைதியினை சீர்குலைக்கும் சில இனவெறியாளர்களின் தவறான செயற்பாடுகளே கலவரங்களுக்கான பிரதான காரணம் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
மகப்பேறு மற்றும் பொதுமருத்துவ வைத்திய நிபணர்கள் 143 பேர் உள்ளடங்கிய குழவினரின் பரிசோதனை மற்றும் கருத்துக்களுக்கு அமைய மேற்குலக நாடுகளின் மருத்துவ முன்னேற்றங்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மலட்டுத்தன்மையினை ஏற்படுத்தும் மாத்திரைகள் உலகில் எவ்விடத்திலும் கிடையாது என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவ நிபுணர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம்களின் உணவகங்களில் கர்ப்பத்தடையினை ஏற்படுத்தும் மருத்துகள் கலந்த உணவுகள் விற்கப்பட்டதாக கூறி சிலர் அந்த பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்களை ஏற்படுத்தி வன்முறைகளை தோற்றுவித்தனர்.
பொய்யான வதந்திகளை நம்பி ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்கள் முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்தனர்.
இதனையடுத்து இவ்வாறு கர்ப்பத்தடையினை ஏற்படுத்தும் மருந்துகள் உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற விடயம் தொடர்பில் பரிசோதிக்க உணவு மாதிரிகள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
அதன்படி இரசாயன பகுப்பாய்வு பிரிவு தனது முடிவுகளை அறிவித்துள்ளது.
அத்துடன் அம்பாறை பிரதேச முஸ்லிம் உணவகத்தில் இவ்வாறான மருந்துகள் உணவகங்களில் கலக்கப்படவில்லை.
மா கட்டிகளே மருந்து வடிவில் உணவில் கலக்கப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் மட்டத்தில் இவ்வாறான கர்ப்பத்தை நிரந்தரமாக இழக்கச் செய்யும் மருந்துகள் ஏதும் கிடையாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் சர்வதேசம் வரை தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. கர்ப்பத்தை நிரந்தரமாக இழக்கச் செய்யும் மருந்துகள் கிடையாது என்றும் உணவில் இதுபோன்ற மருந்துகளை கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதும் இல்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உணவுடன் மலட்டுத்தன்மையினை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலப்பதன் மூலம் கருவளத்தை தடுக்க முடியும் என்ற தவறான அச்சம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளமையினால் பாரிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டன. இது விஞ்ஞான ரீதியான பொய்யான வதந்தியாகவே காணப்படுகின்றது.
சில நோய்களுக்கு தொடர்ச்சியாக பாவிக்கும் மாத்திரைகள் காணமாக கருவளம் பாதிக்க கூடிய சாத்தியம் உண்டு.
மாத்திரைகள் காரணமாக ஏற்படக்கூடிய கருவள பாதிப்பு மேற்படி ஒளடத்தை நிறுத்திய பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும்.
மேற்படி மாத்திரைகளை பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மேல்நாட்டு மருத்துவரின் மருத்துவசீட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் பொய்யான கருத்துக்களை நம்பி தவறான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் நாட்டின் அமைதியினை சீர்குலைக்கும் வதந்திகளுக்கு அடிமையாக வேண்டாம் என்றனர்.