ஞானசார தேரர் ஜப்பான் சென்றார்… இதற்குத்தான் !

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வதிவிட வீசாவை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கிலேயே ஞானசார தேரர் ஜப்பானுக்கு சென்றுள்ளதாக திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஜப்பான் விஜயத்தின் ​போதான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் அவர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ தூதுக்குழுவினருடன் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஞானசார தேரரின் ஜப்பானிய விஜயம் குறித்து கருத்து வௌியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் திலந்த விதானகே, ஞானசார தேரர் தனது ஜப்பானிய வதிவிட வீசாவை புதுப்பித்துக் கொள்வதற்காக சில நாட்களுக்கு முன்னரே ஜப்பான் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

எனினும் கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக அவர் தனது பயணத்தை தள்ளி வைத்திருந்தார்.

தனக்கெதிரான வழக்குகள் நடைபெறும் அனைத்து நீதிமன்றங்களிலும் ஜப்பானிய பிரயாணம் குறித்து ஞானசார தேரர் அனுமதி பெற்றுக் கொண்டுள்ள போதிலும், கோட்டை நீதிமன்றத்தில் மட்டும் அதற்கான அனுமதி பெற்றுக் கொள்ள மறந்துவிட்டார். அதன் காரணமாகவே கடந்த 15ம் திகதி அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஜப்பானிய விஜயத்துடன் எவ்வகையிலும் தொடர்புபட்டிருக்கவில்லை. ஜனாதிபதியின் டோக்கியோ வைபவத்திலும் ஜப்பானின் பிரதான தேரர் விடுத்த அழைப்பை ஏற்றே அவர் கலந்து கொண்டிருந்தார்.

மற்றபடி ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் அவர் தற்செயலாக கலந்து கொண்டதல்லாமல் முன்கூட்டி திட்டமிட்ட வகையில் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் திலந்த விதானகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.