திருப்பூரில், தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை, நைஜீரிய இளைஞர் ஒருவர் கன்னத்தில் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்றைய தினம் தனது தந்தையுடன் பைக்கில் திருப்பூருக்கு வந்திருக்கிறார். ஊத்துக்குளியை அடுத்துள்ள விஜயமங்கலம் சாலையில் இவர்களது வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இன்னொரு பைக்கில் வந்த 2 நைஜீரியர்கள், இவர்களின் வாகனத்தை நெருங்கியிருக்கிறார்கள். அதில் ஒரு நைஜீரியர், அந்த பெண்ணின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியதோடு, அந்தப் பெண்ணுக்கு ஃப்ளையிங் கிஸ்ஸும் கொடுத்துவிட்டு வேகமாக முன்னேறிச் சென்றிருக்கிறார்கள்.
இதைக்கண்ட பெண்ணின் தந்தை, அவர்களை வேகமாக துரத்திச் சென்று, ஊத்துக்குளி அருகே மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு, சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்களும் அங்கு கூட்டமாய் கூடியிருக்கிறார்கள். அப்போது பெண்ணின் தந்தை, நடந்தவற்றை எல்லாம் கூடியிருந்தவர்களிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த பொதுமக்கள் நைஜீரியர்கள் இருவரையும் சுற்றிவளைத்து சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு, இருவரையும் ஊத்துக்குளி பகுதி காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
பின்னர், காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டில் தங்கியிருக்கும் அந்த நைஜீரியர்கள், பனியன் வர்த்தகம் தொடர்பாக திருப்பூருக்கு சென்றுகொண்டிருந்ததாகக் கூறியிருக்கிறார்கள். பின்னர், நைஜீரியர்கள் இருவரிடமும் பிரச்னைகுறித்து எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து அனுப்பியிருக்கிறது காவல்துறை.