‘மகனை விட்டுப் பிரிய மனமில்லை!’ – தந்தை வாக்குமூலம்

சென்னையில், மகனின் கைகளை அறுத்துக் கொலைசெய்த தந்தை, தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

சென்னை தேனாம்பேட்டை, ஜெயம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஊர்மில் டோலியா. இவர், கே.கே.நகர், பி.டி. ராஜன் சாலையில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன், மாதவ் டோலியா (7). கடந்த சில தினங்களாக ஊர்மில் டோலியா, உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் செல்போன் கடையில் வேலைபார்க்கும் வசந்த் என்பவரிடம் கடையை சீக்கிரமாக பூட்டிவிட்டுச் செல்லுங்கள் என்று ஊர்மில் டோலியாக போனில் கூறியுள்ளார். இதனால் அவர், கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.  அதன்பிறகு, ஊர்மில் டோலியா, தன்னுடைய மகன் மாதவ் டோலியாவை பைக்கில் கடைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

கடையைத் திறந்து இருவரும் உள்ளே சென்றுள்ளனர். அதன்பிறகு, மகனை அங்குள்ள கழிவறைக்கு கூட்டிச்சென்று கத்தியால் அவன் கைகளை அறுத்துள்ளார், ஊர்மில் டோலியா. இதில், மகன் மாதவ் டோலியா ரத்தவெள்ளத்தில் மிதந்தார். பின்னர், ஊர்மில் டோலியாவும் தன் கைகளை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இருவரும் மயங்கிக்கிடந்தனர். வெளியில் சென்ற கணவரும் மகனும்  நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வராததால், கவலைப்பட்ட கலைச்செல்வி, இருவரையும் தேடினார். போனிலும் தொடர்புகொண்டார். ஆனால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கலைச்செல்வி, வசந்த்திடம் போனில் பேசி தகவலைத் தெரிவித்துள்ளார்.

உடனே வசந்த், கடைக்குச் சென்று பார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் இருவரும் மயங்கிக்கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வடபழனி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்துவந்து இருவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு மாதவ் டோலியா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும், ஊர்மில் டோலியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கொலை நடந்த இடம்

இந்தச் சம்பவம்குறித்து வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரித்துவருகிறார். ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊர்மில் டோலியாவிடம் மரண வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. அதில், ‘கடன் தொல்லையால் அதிகமாக சிரமப்பட்டுவந்ததால் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தேன். என்னுடைய இரண்டாவது மகன் மாதவ் டோலியாவை விட்டுப் பிரிய மனமில்லை. இதனால், அவனையும் என்னோடு அழைத்துச்செல்லத்தான் இந்த முடிவை எடுத்தேன்’ என்று கூறியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைபெறும் ஊர்மில் டோலியா மயக்கம் தெளிந்ததும் ‘மாதவ் டோலியா எப்படியிருக்கிறான்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவன் நன்றாக இருக்கிறான் என்று தெரிவித்துள்ளனர். மகன் இறந்த தகவல், ஊர்மில் டோலியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. தந்தையே மகனைக் கொன்ற சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.