பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரத்தில் முன்வைக்கப்படவுள்ளது. பிரேரணைக்கு ஐதேகவின் 42 உறுப்பினர்கள் வரையில் ஆதரவு தெரிவிப்பார்கள். குறிப்பாக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் முடிவுக் கட்டத்தை எட்டியுள்ளேன். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கையிலிருந்து செயற்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு நடத்தினார். இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் முடிவுக் கட்டத்தை எட்டியுள்ளேன்.
ரணிலைப் பதவியிலிருந்து அகற்ற அவரது கட்சி உறுப்பினர்களே நடவடிக்கை மேற்கொள்கின்றனர். எனது வேலை இலகுவாக உள்ளது.
ரணில் வெகு விரைவில் பதவி விலகவேண்டும். இது இரகசியமான சதி முயற்சியல்ல. எல்லாம் வெட்ட வெளிச்சமாகவே நடக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கையெழுத்திடுவார்கள். வேறு சிலர் வாக்கெடுப்பின்போது ஆதரவு வழங்குவார்கள். இதற்கு முன்னதாக, ரணில் தாமகவே பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.
ரணில் உங்களைக் காப்பாற்றும் வகையில் செயற்படுகிறாரல்லவா என்ற கேள்விக்கு மகிந்த வெறும் புன்னகை மட்டுமே வெளிப்படுத்தினார்.
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை எவ்வித முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மக்களது விருப்பத்துக்கமையவே கோத்தபாயவா அல்லது வேறு யாராவதா என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இதேவேளை 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், 2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கூட்டு அரசை ஆட்சிக் கவிழ்ப்பேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய இணைப்பு
கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது குறித்து தீர்மானிக்கவில்லை!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களுடனான விசேட சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, அப்படியான முடிவுகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாயவா அல்லது வேறு ஒருவரா என்பது மக்களின் விருப்பத்திற்கு அமைய தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மொத்த வாக்குகளில் ராஜபக்ச அணியினருக்கு இன்னும் 50 வீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை என அரசாங்க தரப்பு முன்வைத்து வரும் வாதங்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜபக்ச, தேசிய தேர்தல் ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தற்போது கிடைத்த வாக்குகளில் 75 வீதமான வாக்குகள் தமது அணிக்கு கிடைக்கும் எனவும் இதனால், 50 வீத வாக்குகளை பெறுவது சிரமமானதல்ல எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை அண்மையில் கண்டி பிரதேசத்தில் நடந்த இனவாத வன்முறைகளுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம், பொதுஜன பெரமுன தரப்பை குற்றம் சுமத்தினாலும் அந்த கட்சிக்கும் இந்த வன்முறைகளுக்கும் சம்பந்தமில்லை.
கண்டி வன்முறைகள் தொடர்பில் பேசப்பட்ட மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி, கண்டி வன்முறைகளுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் ஜனாதிபதி சந்தித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.