மக்கள் கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட தயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் சவால்களை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் மக்கள் வழங்கும் எந்த சவாலாக இருந்தாலும் அதனை புறந்தள்ளாது ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.
அத்துடன் பொது வேட்பாளர் எண்ணக்கரு ஊடாக எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொன்சேகாவும் பொது வேட்பாளராக போட்டியிட்டவர் தானே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அவர்,
பொது வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற நபர் செயற்படும் விதத்தை பொருத்தது. நான் வெற்றி பெற்றிருந்தால், சகல கட்சிகளையும் இணைந்து கொண்டு வேலை செய்திருப்பேன்.
என்னிடம் நிகழ்ச்சி நிரல் இருந்தது. அந்த நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியில் சென்றால்தான் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு ராஜயோகம் இருந்ததா என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த பீல்ட் மார்ஷல், ராஜயோகம் மட்டுமல்ல மரணத்தை ஏற்படுத்தும் தோஷங்களும் இருந்தன எனக் கூறியுள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை தனக்கு வழங்குமாறு பிரதமர் பரிந்துரைத்த போதிலும் ஜனாதிபதி அதனை முற்றாக நிராகரித்துள்ளார் எனவும் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.