மயிரிழையில் தோல்வியடைந்த இலங்கை!

இலங்கைக்கு எதிரான 6வது டி20 போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை (நிதாகஸ்) முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.

இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்று வருகின்றன.

இத்தொடரில் இந்தியா 4 போட்டியில் 3ல் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

இந்த நிலையில், 6வது மற்றும் கடைசி லீக் போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சு தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை குவித்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக திசாரா பெராரா 58 ரன்களும், குசல் பெராரா 61 ரன்களும் குவித்தனர்.

வங்கதேச அணியில் முஷ்டபிகுர் ரஹ்மான் 2 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட வங்கதேச அணியில் தொடக்க வீரர் தமீம் இக்பால் 50 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் வரிசையாக டக் அவுட்டில் வெளியேறினர்.

கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், மஹமதுல்லா மட்டும் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

வங்கதேச அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைபட்ட போது, போட்டியின் 19.2வது ஓவரில் வெளியிலிருந்த வந்த வங்கதேச வீரர் இலங்கை வீரரை சைகையால் ஏதோ திட்டியுள்ளார்.

இதனால், சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. மேலும், வங்கதேச கேப்டன் ஷாகீப் அல் ஹசன் மைதானத்தில் இருந்த வீரர்களை வெளியேறுமாறு அழைத்தார்.

இதனால், நடுவர்கள், அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து, மீண்டும் போட்டி தொடர்ந்தது.

இதில், 3வது பந்தில், 4 ரன்களும், 4வது பந்தில் 2 ரன்களும் எடுக்கப்பட்ட நிலையில், 5வது பந்தில் மஹமதுல்லா சிக்ஸ் அடிக்க வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்காளதேசம் அணியின் மகமதுல்லா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதவுள்ளது.