யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

ந்த உலகில் தோன்றிய உயிரினங்களில் சிலவற்றைத் தவிர மற்ற அனைத்துக்கும் தூக்கம் இன்றியமையாத ஒன்று. மறுநாளை உற்சாகத்துடன் தொடங்க, இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியம். இதயம், சிறுநீரகம் நன்றாக இயங்க, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரைநோய் போன்ற நோய்களைத் தவிர்க்கவும் உறக்கம் நமக்குத் தேவை.

தூக்கம்

தூக்கத்தின் அவசியத்தை உணர்த்துவதற்காக `வேல்ர்டு அசோசியேஷன் ஆஃப் ஸ்லீப் மெடிசின்’ (World association of sleep medicine) என்ற அமைப்பு, 2008-ம் ஆண்டு முதல் உலக தூக்க தினத்தைக் கொண்டாடிவருகிறது. இந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி, உலக தூக்க தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முழக்கமாக `உங்களுடைய வாழ்க்கையை இசை லயம் கெடாமல் அனுபவிக்க தூக்க உலகில் இணைந்துகொள்ளுங்கள்’ (Join the sleep world preserve your rhythms to enjoy life) என்ற வாக்கியத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இன்று உலக தூக்க தினம். தூக்கத்தின் முக்கியத்துவதையும், அதைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் பார்ப்போம்.

இன்றைய இளைஞர்கள் எப்படித் தூங்க வேண்டும் என்றே தெரியாமல் இருக்கிறார்கள். இரவு வெகுநேரம் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அதிலேயே லயித்திருப்பது இப்போது வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். இது தொடர்கதையானால், ஒருநாள் உறக்கம் என்பதே கனவாகிப் போகும். இதை இளம்தலைமுறையினர் உணரவேண்டியது அவசியம்.

இளைஞர்கள்

தூங்கும் நேரமும், ஆழ்ந்த தூக்கமும் வயதுக்கு ஏற்ப மாறுபடக்கூடியவை. `ஒவ்வொரு வயதினரும் அவரவர் வயதுக்கு ஏற்ப சரியாகத் தூங்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். எந்த வயதினர், எவ்வளவு நேரம் தூங்கலாம் என ஒரு பட்டியலிருக்கிறது. அதன்படி,

பச்சிளம் குழந்தைகள் – 16 முதல் 20 மணி நேரம்.

பதின்பருவத்தினர் – 9 முதல் 10 மணி நேரம்.

இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் – 7 முதல் 10 மணி நேரம்.

முதியவர்கள் – 8 முதல் 12 மணிநேரம்.

குழந்தைகள்

ஏன் நாம் உறங்க வேண்டும்… உறக்கம் என்பது அவ்வளவு முக்கியமானதா? நிச்சயமாக. நம் உடல் சரியாக இயங்குவதற்குத் தூக்கம் இன்றியமையாத ஒன்று. நம் உடல் சோர்வை மட்டும் இது போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மனரீதியான பிரச்னைகளிலிருந்தும் நம்மை விடுவிக்க உதவுகிறது. நாம் ஒருநாள் இரவில் சரியாக உறங்கவில்லையென்றால், அடுத்த நாள் நமது கண்களில் எரிச்சல் ஏற்படும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் கண்கள் இயக்கத்திலிருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அத்தியாவசியமானது. நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்யவும் உறக்கம்தான் உதவுகிறது. மற்றவர்களை ஒப்பிடும்போது, நன்றாகத் தூங்கும் பழக்கமுடையவர்களின் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் தேவையான அளவுக்குத் தூங்குபவரின் உடல் எடை சீராக இருக்கும். மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

நன்றாகத் தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம்?

* தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கம் சீராகி, தூக்கத்தை வரவழைக்கும்.

* உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைப்பயிற்சி, தியானமாவது செய்வது நல்லது.

* செல்போன்,லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே, கண்கள் ரிலாக்ஸாகி தூக்கம் வரும்.

* இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மிகக் குறைவாகவோ, மிக  அதிகமாகவோ  சாப்பிடுவதை இரவில் தவிர்க்க வேண்டும்.

லேப்டாப்

சரியாகத் தூங்கவில்லையென்றால், இதயநோய், மனஅழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தைச் சேர்த்துவைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலைச் சரியாகப் பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம். அதற்கு உதவுவதுதான் தூக்கம் என்பதைத் தெரிந்துகொண்டு, நன்றாகத் தூங்குவோம்… நோயின்றி வாழ்வோம்!