ஒருங்கிணைப்பாளர்கள் கிடையாது இ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும்…! – கே.சி.பழனிசாமி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமானால் மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவளிக்க வேண்டும் என்று கோவையில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அ.தி.மு.க அதற்கு வாக்களிக்கும் என்று தொலைக்காட்சி விவாதத்தில் கூறியதற்காக அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் இணைந்த பிறகு கட்சியை நிர்வகிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை  உயர்மட்ட குழு அமைக்கப்படவில்லை. அ.தி.மு.க சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பாக தகவல்களை நான் ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையத்திடம் வாங்கியுள்ளேன். அதில் சட்ட விதிகள் பரீசிலணையில் இருப்பதாகதான் தெரிவித்துள்ளனர். இதுவரை அ.தி.மு.க சட்ட விதி திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. அப்படியென்றால் இவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் என்பதே இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அர்த்தம். என்றபடி ஆர்.டி.ஐ ஆவணத்தை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசுக்கு எதிராக நான் டி.வி விவாதத்தில் பேசியதைப் பார்த்துவிட்டு பி.ஜே.பியில் இருந்து ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் மிரட்டியிருக்கிறார்கள். அதனால்தான் என்னை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. தங்கள் சுயநலத்திற்காக கட்சியை பலிகடா ஆக்குகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லையெனில் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் நான் அரசியலிலிருந்தே  ஒதுங்கிக்கொள்கிறேன். அணிகள் இணைந்த பின்பு கட்சி நிர்வாகிகளிடம் எதுவும்  விவாதிக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு அ.தி.மு.க ஒன்றும் பண்ணையில்லை. எடப்பாடி பழனிச்சாமி பண்ணையாரும் இல்லை. அ.தி.மு.கவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் கூட எல்லை மீறி பேசுகின்றனர். அடித்துக்கொள்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் இவர்களால் நடவடிக்கை முடியவில்லை. என்மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். காவிரி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததைப்போல ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இருவராலும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடியுமா? ஹெச்.ராஜா, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் அ.தி.மு.கவையும், அ.தி.மு.கவினரையும் இழிவாக பேசிவருகிறார்கள். அவர்கள் மீதுதெல்லாம் இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை சொல்ல வேண்டும்? இவர்களின் செயல்பாடுகள் சசிகலாவுடன் இணைவதற்கான முயற்சியாககூட இருக்கலாம். ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இடையே எந்த மோதலும் இல்லை. அவர்களுக்குள் வரவு செலவு சரியாக இருக்கிறது’ என்றார்.