சிரியாவில் இன்னுமொரு முள்ளிவாய்க்கால்!!

சிரியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நீடிப்பதற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தான் காரணம் என்பது அனைத்து தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.இந்த இரு வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் இதுவரை 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 30ஆயிரம் பேர் வெளியேறினர்.கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.இதனால் ஒரு நாளில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் ஒளிப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சிரியாவின் கிழக்கு கூட்டா நகரில் 70 சதவீத பகுதிகளைப் போராளிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக அரசுப் படைகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய வானூர்திப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உட்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் சிரிய ராணுவமும் தற்போது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனிடையே கூட்டா நகரில் 70 சதவீத பகுதிகளை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றி விட்டதாக சிரிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதே நிலை 2009 மே 17 மற்றும் 18ம் திகதிகளில் இடம் பெற்றிருந்தது ஆனால் அதற்கு ஈடான நிலை இன்று சிரியாவில் இடம் பெற்றுள்ளதாக மனித உரிமைகள் அவதானிகள் கூறுகின்றார்கள்.