சாமித்தோப்பு தலைமை பதியை அரசு கையகபடுத்துவதற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அவரது பாணியில் விளக்கம் அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தலைமை பதியை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அய்யாவழி இந்து மதம் அல்ல தனி வழி என அறிவிக்க கோரியும் சாமித்தோப்பு பதி தலைமை நிர்வாகி பாலபிரஜாபதி தலைமையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சாமிதோப்பு பதி தலைமை நிர்வாகி பாலபிரஜாதிபதி பேசுகையில், “பதி குறித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என்னிடம் நம்பிக்கையுடன் கூறினார். அவரை மட்டும் நான் நம்புகிறேன். அவர் நாளை அல்லது நாளை மறுநாள் இங்கு வருவார் என எதிர்பார்க்கிறேன். அரசு நல்ல முடிவு சொல்லாமல் இருந்தால், சேலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்’’ என்றார்.
திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழ்நாட்டின் அறநிலையத்துறையின் கீழ் உள்ள அத்தனை கோயில்களும் சரியாக செயல்படவில்லை என சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், அய்யாவழி கோயிலை எடுத்துவிட ஆதிக்க சக்திகள் திட்டம் போடுகின்றன. இந்தியா முழுவதும் பல மடங்கள் இருக்கின்றன. அரசு அந்த மடங்களை எல்லாம் எடுக்க முடியுமா. அய்யாவழி தனிவழி ஏற்படுத்தி தருவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். அடுத்ததாக ஸ்டாலின் முதல்வராக வரும்போது இதை செய்து தருவோம். நானும் அய்யாவழி என்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்பேன்’’ என்றார்.
ஆஸ்டின் எம்.எல்.ஏ. பேசுகையில், “அய்யாவழிக்கும் இந்து சமயத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த பதியை கைப்பற்றுவதில் அரசுக்கு என்ன அவசரம். கோயில் நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெறவேண்டும்’’ என்று பேசினார். அடுத்து பேசிய சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., “ஆதினங்களுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் கைவைக்காமல் அய்யா தலைமைபதியில் கைவைக்க முயற்சிக்கிறது அரசு’’ என்று குற்றம்சாட்டினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அய்யா வைகுண்டர் வழிபாட்டுத் தலத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சிப்பது அர்த்தமற்றது. நாடெங்கும் கிராமங்கள் தோறும் குலதெய்வங்கள் உள்ளன, அவற்றை எடுப்பார்களா?. எந்த கோயிலுக்கும் அனுமதி இல்லை என்று சொல்லப்பட்ட காலத்தில், அந்த கோயில்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தனி வழிபாட்டை ஏற்படுத்தி எதிர்புரட்சி ஏற்படுத்தியவர் அய்யா. அரசு எடுத்துக்கொண்டால் அந்த தத்துவத்தை சாகடித்து விடுவார்கள். அய்யா வழி பதியை எடுக்கலாம் என நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூ டாது.
ரஜினி பகுதிநேர அரசியலில் ஈடுபடுவதாக கூறி விட்டு இமயமலைக்கு போயிருக்கிறாரே என நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். ரஜினிதானே தமிழகத்தை காக்க வந்த பரமாத்மா என கூறுகிறீர்கள். ஆனால் அவரிடம் இந்த கேள்வியை கேட்காமல் என்னிடமே வந்து கேட்கிறீங்க?. தமிழகத்தில் எது நடந்தாலும் கவலைப்படாமல் இமயமலையில் போய் இருப்பதுதான் ஆன்மீக அரசியல். தீவிபத்து ஏற்பட்டாலும், குண்டு வெடித்தாலும் என்ன நடந்தாலும் ஆன்மீகவாதிகள் சாந்தி, சாந்தி என சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதுதான் ரஜினியின் ஆன்மீக அரசியல்’’என்றார்.