ஏ.சி பராமரிக்கும் முறை : ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

வீட்டில் உள்ள ஏ.சி  இயல்பான நிலையில்தான் இருக்கிறதா எனப் பெரும்பாலும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. பழுதாகிப் பயன்படுத்த முடியாமல் போனால் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பழுதடையாமலேகூட  ஏ.சி  வெடித்து உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து  ஏற்படலாம்.

 

தஞ்சை  கபிஸ்தலத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், நேற்று நள்ளிரவு இவர் வீட்டில் இருந்த ஸ்பிலிட் ஏ.சி.-யில் இருந்து திடீரெனப் புகை வந்திருக்கிறது.  அடுத்த சில நிமிடங்களிலேயே ஏ.சி. வெடித்து தீ பற்றி எரிந்திருக்கிறது. இதில் கட்டில், மெத்தை உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின. தீயணைப்புப் படை வீரர்கள் வந்து தீயை அணைத்திருக்கிறார்கள். ரவிச்சந்திரன் வீட்டு ஸ்பிலிட் ஏ.சி ஏன் தீப்பற்றி எரிந்தது ?

கடந்த சில மாதங்களாகக் குளிர்காலம் என்பதால் ஏ.சி-யை பயன்படுத்தாமலே இருந்திருக்கிறார்கள். தற்பொழுது வெயில்காலம் தொடங்கிவிட்டதால் மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான் தீப்பற்றி எரிந்திருக்கிறது. பயன்படுத்தாமல் இருந்தபோது தூசி மற்றும் ஒட்டடைகள் அடைந்து உள்ளேயே சேகரமாகியிருக்கிறது. மின்சாதனப் பொருள்களில் இயல்பாகவே வெப்பம் உருவாகும். சர்வீஸ் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தியதால் தூசி, ஒட்டடை சூடேறி தீப்பற்றி எரிந்திருக்கிறது. ஏ.சி-யில் கேஸ் இருப்பதால் வெடித்து பெரிய அளவில் ஆபத்து நேர்ந்திருக்கிறது.  அதனால் ஏ.சி-யை 6 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். தொடர்ந்து உபயோகிக்கப்படும் ஏ.சியைவிட பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஏ.சி-யில் தான் ஆபத்து அதிகம். ஏ.சி பயன்படுத்தும் அறைகளின் ஜன்னல் கதவுகளின் ஏதேனும் ஒன்றையாவது லேசாகத் திறந்து வையுங்கள். புகை வெளியேறாததால் தூக்கத்திலேயே பலர் இறந்ததும் உண்டு. லோ சர்க்யூட் போன்ற காரணங்களாலும் தீப்பிடிக்கக்கூடும்.