எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த எம்.எல்.ஏ-க்கள்!

அ.தி.மு.க-வில் நிரப்பப்பட்ட புதிய பதவிகளால் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் எம்.எல்.ஏ-க்கள். ‘வடசென்னையை இரண்டாகப் பிரிப்பவர்கள், அனைத்து மாவட்டங்களையும் பிரிப்பார்களா. இதனை சீனியர்கள் ஏற்றுக் கொள்வார்களா… நெல்லையில் ஏதாவது மாற்றம் நடந்தால், பதவிகளை ராஜினாமா செய்துவிடுவோம்’ என எடப்பாடி பழனிசாமியை எச்சரித்துள்ளனர் மூன்று எம்.எல்.ஏ-க்கள்.

அ.தி.மு.க-வில் 19 அமைப்புச் செயலாளர்கள் உள்பட பல்வேறு பதவிகளுக்குக் கடந்த 16-ம் தேதி புதிய நிர்வாகிகளை அறிவித்தது தலைமைக் கழகம். இதில், ‘பண்ருட்டி ராமச்சந்திரன், சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ராஜகண்ணப்பன், ஜே.சி.டி.பிரபாகரன், மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், சண்முகநாதன், கோகுலஇந்திரா உள்ளிட்ட 19 பேர் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்களாகவும் கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக வைகைச் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வடசென்னை வடக்கு மாவட்டத்தை நிர்வாக வசதிக்காகக் கிழக்கு, மேற்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மாவட்டச் செயலாளர்களாக ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டச் செயலாளராகச் சையதுகான், திருச்சி மாநகர் மாவட்டச் செயலராகப் ப.குமார், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலராகச் சத்யா, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலராக ரவி, தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலராக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக’ அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்து.

தலைமைக் கழகத்தில் இந்த அறிவிப்பு சீனியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. “புதிய பதவிகளை இதுவரையில் நிரப்பாமல் இருந்ததற்குக் காரணம், தினகரன் அணியில் இருக்கும் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, வேலூர் கிழக்கு மா.செ-வாக இருந்த சோளிங்கர் பார்த்திபன் உள்ளிட்டவர்கள் மீண்டும் கழகத்தில் இணைவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்ததுதான். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாகத் தினகரன் புதிய கட்சித் தொடங்கிய மேடையில் இவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். ‘இனி அவர்கள் வர மாட்டார்கள்’ என உறுதியாகத் தெரிந்துவிட்டதால்தான், புதிய நிர்வாகிகளை ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் அறிவித்தனர்.

இதற்காக, கடந்த 15-ம் தேதி இரவு 12 மணி வரையில் தலைமைக் கழகத்தில் அமர்ந்து விவாதித்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்படி அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் துணை முதல்வருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள். மாவட்டங்களை இரண்டாகப் பிரிப்பது தொடர்பான பேச்சு எழுந்தபோது, ‘எந்த மாவட்டத்தையும் பிரிக்கக் கூடாது. அப்படிப் பிரிப்பதாக இருந்தால் அனைத்து மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும்’ எனச் சிலர் கொந்தளித்தனர். அதையும் தாண்டி, நிர்வாக வசதிக்காக வடசென்னையைக் கிழக்கு, மேற்காகப் பிரித்துள்ளனர். இப்படிச் செய்வதற்குக் காரணம், அவைத் தலைவர் மதுசூதனனின் மிரட்டல்தான். ‘தன்னுடைய ஆதரவாளர் ராஜேஷுக்குப் பதவி கொடுக்க வேண்டும்’ என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, மாவட்டத்தை இரண்டாகப் பிரித்துள்ளனர்.

அதேபோல், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த பாப்புலர் முத்தையா, தினகரன் அணிக்குச் சென்றுவிட்டார். ‘அவர் இருந்த இடத்தில் தட்சை கணேசராஜாவைப் போட வேண்டும்’ என்ற பேச்சு எழுந்தது. இதற்கு அனைவரும் சம்மதித்துவிட்டனர். அதேபோல், நெல்லை புறநகர் மா.செ பிரபாகரனை மாற்றிவிட்டு, தன்னுடைய ஆதரவாளரைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார் ஓ.பி.எஸ். இதை எம்.எல்.ஏ-க்கள் யாரும் ரசிக்கவில்லை. இந்தக் குழப்பத்தால் நெல்லை அ.தி.மு.க-வில் பொறுப்புகளைப் போடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். நெல்லை புறநகர் மா.செ-வுக்குப் பதிலாக, சசிகலா புஷ்பாவின் அன்பைப் பெற்ற நபர் ஒருவரைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் பன்னீர்செல்வம். இந்த நபர் ஓ.பி.எஸ்ஸுக்கும் மிக நெருக்கமானவர். இப்படியொரு முயற்சி நடப்பதை அறிந்த தென்காசி எம்.எல்.ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ முருகையா பாண்டியன், ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்இந்த சந்திப்பின்போது, ‘ மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து பிரபாகரனை நீக்கக் கூடாது. அப்படி நீக்குவதாக இருந்தால் எங்கள் மூன்று எம்.எல்.ஏக்களில் ஒருவரை மாவட்ட செயலாளராக நியமியுங்கள். இதையும் மீறி சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஒருவரை மா.செவாகக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். அப்படி அந்த நபர் வந்துவிட்டால், அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம்’ எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். இப்படியொரு நேரடி மிரட்டலை எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கவில்லை.

அந்த மூன்று எம்.எல்.ஏக்களிடமும், ‘ உங்களை மீறி யாரையும் மாற்ற மாட்டேன்’ என சமாதானப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய ஆதரவாளர் என ஓ.பி.எஸ் நினைக்கும் நபருக்கு, மனோஜ் பாண்டியனின் ஆதரவும் இருக்கிறது. அ.தி.மு.கவில் சசிகலா புஷ்பா விவகாரம் பூதாகரமான நேரத்தில்தான், யாருக்கும் அறிமுகம் இல்லாமல் இருந்த பிரபாகரனுக்கு சீட் கொடுத்தார் ஜெயலலிதா. தொடர்ந்து புறநகர் மா.செ பொறுப்பும் வழங்கினார். இப்போது மீண்டும் சசிகலா புஷ்பா ஆதரவாளர் ஒருவருக்கே மா.செ பதவியைக் கொடுக்க நினைப்பதை, சீனியர்கள் யாரும் ரசிக்கவில்லை. ‘ஆதரவை வாபஸ் பெறுவோம்’ என்பது ஏதோ பேச்சுக்காகக் கூறிய வார்த்தைகள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமியும் உணர்ந்து கொண்டார்” என்றார் விரிவாக.

” ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வலுவாக இருக்கிறார். அவரை மீறி பன்னீர்செல்வத்தால் எதையும் செய்ய முடிவதில்லை. சில அரசு விழாக்களில் பன்னீர்செல்வம் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகளும் நடந்து வந்தன. எனவே, கட்சிப் பொறுப்புகளில் தன்னுடைய ஆதரவாளர்களை அதிக அளவில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சசிகலா, தினகரனைக் கட்சியில் இருந்து நீக்கிய பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். இப்படியொரு புதிய பதவிக்கு கட்சியின் செயற்குழுவில் அனுமதி பெறவில்லை. அப்படியிருக்கும்போது, ‘ இவர்களால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுபவர்களின் பதவிகளும் செல்லுமா?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சட்டச் சிக்கல்களை எல்லாம் ஆட்சியில் உள்ளவர்கள் உணர்ந்து கொண்டார்களா என்பதும் தெரியவில்லை” என்கின்றனர் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலர்.