`உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில நல்ல பழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும் என்றாலும், 20 வயதின் ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பொருந்தும். டீன் ஏஜ் பருவம் நிறைவடைந்து, உடலும் மனமும் பக்குவநிலையை அடையக்கூடிய வயது அது. இந்த வயதில் உருவாகும் நல்ல பழக்கவழக்கங்கள்தான் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். `பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானவையாக மாற்றிக்கொண்டால், நம் ஆயுள் காலம் 20 ஆண்டுகள் அதிகரிக்கும்’ என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 வயதுக்கு மேல் ஆரோக்கியம் காக்கக் கடைப்பிடிக்க வேண்டிய 10 நல்ல பழக்கங்களைப் பட்டியலிடுகிறார் ஆன்டி ஏஜிங் நிபுணர் கவுசல்யா நாதன்.
* பி.எம்.ஐ.-யைக் கணக்கிடக் கற்றுக்கொள்ளுங்கள்!
ரத்த அழுத்தம், இதயநோய்கள், சர்க்கரைநோய் உட்பட பல நோய்களுக்கு நுழைவாயிலாக இருப்பது உடல் பருமன். நாம் எல்லோருமே உயரம் மற்றும் வயதுக்கேற்ற உடல் எடையைப் பாரமரிக்க வேண்டும். எனவே, சரியான உடல் எடையை அளவிட உதவும் `பி.எம்.ஐ’ (Body Mass Index) எனப்படும் அளவீட்டைக் கணக்கிட்டு, அதற்கேற்ப உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
* நீரின் தேவை அறியுங்கள்!
தண்ணீர், உடலின் கழிவுகளை வெளியேற்றி, நச்சுகளை நீக்குகிறது. உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆனால், நம்மிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. அதற்கு மாற்றாக டீ, காபி, குளிர்பானங்களைக் குடிக்கிறோம். இதனால் நீரிழப்பும் (Dehydration) தேவையற்ற பிற உடல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்த்துவிட்டு, கிரீன் டீ, காய்கறி ஜூஸ், சூப் போன்றவற்றை அருந்தலாம்.
* டிஜிட்டல் டீடாக்ஸ்… பின்பற்றுங்கள்!
வாட்ஸ்அப், ஃபேஸ்ஃபுக் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடப்பதால், பலருக்கும் சரியான நேரத்துக்கு உணவு, உறக்கம் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் இவற்றைத் தவிர்த்துவிட்டு உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதைப்போல, மாதத்தில் சில நாள்களிலாவது லேப்டாப், மொபைல் பயன்பாடு இல்லாத ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ முறையைப் பின்பற்ற வேண்டும்.
* உடற்பயிற்சி தவிர்க்காதீர்!
உடலுக்கு வலுவூட்டும் வாக்கிங், ஜாக்கிங், நீச்சல், சைக்கிளிங், ஜிம் எக்சர்சைஸ் போன்ற ஏதாவது ஓர் உடலுழைப்பு உள்ள பயிற்சியை தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து, இதய ஆரோக்கியம் மேம்படும்; உடல் பருமன் பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும். யோகா, மூச்சுப்பயிற்சி போன்ற மனவலிமைக்கு உதவக்கூடிய பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
* உணவில் கவனம்!
ஃபாஸ்ட் ஃபுட், ஜங் ஃபுட் போன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ மற்றும் சி வகை உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
* ஹெல்த்தி ஸ்நாக்ஸ் சாப்பிடப் பழகுங்கள்!
சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்தவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, நட்ஸ், சுண்டல் போன்றவற்றையும், இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற நீராவியில் வேகவைத்தவற்றையும் உணவுப் பட்டியலில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
* சருமப் பராமரிப்பில் வேண்டும் அக்கறை!
சுத்தமான தண்ணீரில் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். சூரிய ஒளியிலிருந்து கண்களைப் பராமரிக்க, வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவதும், சன்ஸ்க்ரீன் க்ரீம் பயன்படுத்துவதும் நல்லது. வைட்டமின் இ, வைட்டமின் சி சத்துகள் அதிகமிருக்கும் உணவை அதிகம் சாப்பிடுவதும் சருமப் பாதுகாப்புக்கு உதவும்.
* ரத்த அழுத்தத்தைக் கவனியுங்கள்!
இன்றைய தலைமுறையைப் பெரிதும் பாதிக்கும் இதயநோய்கள், சிறுநீரகப் பிரச்னைகள், பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது ரத்த அழுத்தம். எனவே, ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்க வேண்டும்.
* மூளைக்கு வேலை கொடுங்கள்!
சுடோகு போன்ற மூளைக்கு வேலை தரும் பொழுதுபோக்கு, விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். அன்றாடம் புத்தகம் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். புதிய மொழி அல்லது புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இவற்றின் மூலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்க முடியும்.
* தாம்பத்தியம் தவிர்க்காதீர்!
உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது தாம்பத்யம். ஹார்மோன் சுரப்பு சமநிலையில் இருக்க தாம்பத்யம் பெரிதும் உதவும். மன அழுத்தம் குறைப்பதிலும் இதற்கு முக்கியப் பங்கு உண்டு. இன்றைய வாழ்க்கைச் சூழலில் உங்கள் வாழ்க்கை துணைக்கென போதிய நேரத்தை ஒதுக்க வேண்டியது மிக மிக முக்கியம்.