புதுச்சேரியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் செருப்பு வீசப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, வில்லியனூரில் திராவிடர் கழகம் சார்பில் மணியம்மையார் நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னையிலிருந்து வீரமர்த்தினி மற்றும் அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்கள். அப்போது அங்கே கடவுள் மறுப்பு பற்றி பேசப்பட்டதால் கூட்டத்தில் இருந்து மேடையை நோக்கி செருப்பு ஒன்று வீசப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்ட பா.ஜ.க-வினர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திராவிடர் கழகத்தினருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து வாக்குவாதத்தில் காரசாரமாக ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. எதிர்பாராதவிதமாக பா.ஜ.க. தரப்பு ரகளையோடு அடிதடியிலும் இறங்கியதால் அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. அதனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் வில்லியனூர் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்தனர். அதனடிப்படையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வில்லியனூர் மாவட்ட தலைவர் மோகன்குமார், பால பாஸ்கரன், அகிலன் உட்பட 13 பேர் மீதும், திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, ராஜூ, சடகோபன் உட்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.