`நண்பனை சிக்கவைக்க விபரீத செயல்’ – சிக்கிய ஐ.டி ஊழியர்!

நண்பனைச் சிக்கலில் மாட்டிவிட சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு சென்னை ஐ.டி ஊழியர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘சென்னை சர்வதேச விமான நிலையத்தை சக்தி கணேசன் என்பவர் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகத் தன்னிடம் தெரிவித்தார்’ என்று பதற்றமான குரலில் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறையின் காவலர்கள், நீங்கள் யார் பேசுறது என்று கேட்டதற்கு தீபு ஆனந்த் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இந்தத் தகவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை கூடுதல் கமிஷனர் (தெற்கு) சாரங்கன் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் மகேஸ்வரி ஆலோசனையின் பேரில் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் கோவிந்தராஜூ தலைமையில் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மற்றும் மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களைத் தீவிரமாகத் தேடினர். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த நம்பர் மற்றும் சிக்னல் ஆகியவற்றின் அடிப்படையில் தேடுதல் படலம் நடந்தது. இந்தச் சூழ்நிலையில், மிரட்டல் விடுத்தவர்கள் போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “திருச்சி, துறையூர் கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் தீபு ஆனந்த். இவரின் நண்பர் சென்னை, ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்த சக்தி சரவணன். இருவரும் சோளிங்கநல்லூரில் உள்ள பிரபலமான தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். சக்தி சரவணனை சிக்கலில் மாட்டிவிட தீபு ஆனந்த் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியாவின் டாப் டென் பல்கலைக்கழகத்தில் ஒன்றான ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பல்கலைக்கழகத்தில் தீபு ஆனந்த் படித்தவர். அதுபோல சக்தி சரவணனும் எம்.எஸ் ஐ.டி படித்துள்ளார். எங்களிடம் சிக்காமலிருக்க தங்களின் தொழிற்நுட்ப அறிவை இருவரும் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் நாங்கள், ஒவ்வொரு கட்டமாக முன்னேறி இருவரையும் பிடித்துள்ளோம்” என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “தீபு ஆனந்த்துக்கு சென்னை விமான நிலையத்தில் தெரிந்தவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாகச் சக்தி சரவணன் கூறியுள்ளார். ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். இதற்காகத்தான் தீபு ஆனந்த் தன்னுடைய செல்போனில் போலீஸ் கட்டப்பாட்டு அறையின் அவசர நம்பரில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அவரது செல்போன் நம்பர், கட்டுப்பாட்டு அறையில் பதிவாகியிருந்ததால் எங்களிடம் எளிதில் சிக்கிக்கொண்டார். வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன், விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை” என்றார்.

ஒரு மணி நேரத்தில் மிரட்டல் விடுத்தவர்களைப் பிடித்த போலீஸாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.