இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை இன்று (19) திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை அனைவரும் அறிந்ததே. நாட்டில் அன்பு செலுத்துகின்ற அரசியல்வாதிகள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது.
அரசியல் ஆதாயம் பெறுவதற்காக சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்து வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று அவசியமில்லை.
இந்த நாட்டில் உள்ள தேசிய ஒற்றுமை மற்றும் சக்தியை பலப்படுத்த வேண்டுமென்ற அவசியமும் இல்லை. இந்த நாட்டு மக்கள் மத்தியில் நிரந்தரமான ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்பதும் அவர்களின் நோக்கம் அல்ல.
அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதே நோக்கமாக இருக்கின்றது. அவ்வாறான சக்திகளிடம் ஏமாந்து போவதற்காகவும் மக்கள் இருக்கின்றார்கள்.
நாட்டின் பிரச்சினையைத் தீர்;ப்பதற்காக மிகவும், நியாயமான முறையில் சிந்திக்கக் கூடியவர்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
எதிர்காலத்தில் யார் அடுத்த ஜனாதிபதி மற்றும் அடுத்த பிரதமராக வரப்போகின்றார்கள் என்பதல்ல மக்களின் பிரச்சினை. சிலர் நீண்டகாலமாக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.
ஆனால், ஒரு சிலர் மாத்திரமே நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்பட்டு வருகின்றார்கள். கடந்த 50 மற்றும் ; 60 ஆண்டு கால இந்த நாட்டின் அரசியலைப் பார்த்தால், அதுவே எமக்குத் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.
இவைகள் அனைத்தினையும் வைத்து எமது அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் மீது அன்பு செலுத்தாது, உண்மையில் அரசியல் ஆதாயத்திற்காக செயற்படுபவர்களை மக்கள் இனங்காண வேண்டும்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நாட்டு மக்கள் எனக்கு நல்லதொரு வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள். மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையினை ஒரு நாளும் நான் வீணடிக்கவில்லை. அந்தக் கொள்கையை நான் மாற்றவும் இ;ல்லை. எவ்வளவு எதிர்ப்பு அரசியல் வந்தாலும் கூட எனது கொள்கையை மாற்றப் போவதுமில்லை.
யார் சரியானநடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என்பதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சந்தர்ப்பவாதிகளை இணங்காண வேண்டும். அவற்றினைப் பற்றி மிகவும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்படுவோம். தனிப்பட்டஅரசியல் நிகழ்ச்சி நிரல் எமக்குத் தேவையில்லை.
நாளை எமது நாட்டின் எதிர்காலம் எந்த எல்லையை தொட வேண்டுமென்பதே எமது முக்கியமான பிரச்சினை. அந்த கொள்கையினை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
இந்தப் பாடசாலைக்கு வரும் வழியில், காணாமல் போனோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காணாமல் போனோர் விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளதுடன், அதற்கான ஒரு குழுவினையும் நியமித்துள்ளோம்.
காணாமல் போனோர்களின் குடும்பத்தின் நலன் விடயங்களை பார்ப்பதற்கான அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான வேலைத்திட்டத்தினை தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், தெளிவுபடுத்தியுமுள்ளோம்.
ஆகவே, காணாமல் போனோர் விடயம் தொடர்பாக திரும்பவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து நாட்டிற்காக செயற்படுவோம்.
இனங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். இனங்களுக்குள் உள்ள முறுகல் நிலையை இல்லாமல் ஒழிப்போம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.
எமது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின் போது, கடந்த தேர்தலில் வடமாகாண மக்கள் எனக்கு அளித்த ஆதரவினைப் பற்றிச் சொன்னார்.
நான் அந்த செய்ந்நன்றியை மறக்கவில்லை. அந்த செய் நன்றியை மறக்காத காரணத்தினால் தான் வடமாகாணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றேன்.
எமக்குப் பல அரசியல் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், அதற்கு அப்பால் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அதுவே, மனிதாபிமானம் என்ற இரக்கமும் நெருக்கமும் என்றார்.
மனிதன் மீது அன்பு காட்டுவதும், மனிதனுக்குச் சேவை செய்வதுமே மனிதனுக்கு இருக்கும் கடமை. அந்தக் கொள்கையில் இருப்பதனாலேயே இந்த நிகழ்வில் இன்று கலந்து கொண்டிருக்கின்றேன். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
வடபகுதியில் கல்வி கற்ற சிங்கள மாணவர்கள் 40 முதல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளார்கள். முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கே.பி. ரத்நாயக்க வடபகுதியில் கல்வி கற்றார் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.
மொழி, மதத்திற்கு அப்பாற்பட்டு அந்தந்த பாடசாலைகளில் கல்வி போதிக்கப்படுகின்றது. உலகில் எந்த நாட்டிலும் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமாயின், அந்த நாட்டில் உள்ள மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டும்.
நாட்டில் கல்வியை அதிகமாக புகட்ட, புத்திஜீவிகள் அதிகரிக்கும் போது, நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து விடும். பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படுவதற்கான காரணம், அந்த நாட்டில் கல்வி கற்றோர் இல்லாமையே. அதற்கமைய, மக்களுக்கு கல்வியை ஏற்படுத்திக் கொடுப்பதே அரசாங்கத்தினதும், தனியார் நிறுவனங்களின் முக்கிய கடமையாகும்.
அரசாங்கமாக இருந்தாலும், தனியாராக இருந்தாலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகில் மிகப் பெரிய நாடான சீனாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி இலவசமாக வழங்கப்படுவதில்லை. ஆனால், இலங்கையில் இலவச கல்வி வழங்கப்படுகின்றது.
கல்வி மற்றும், சுகாதாரம் உட்பட ஏழை மக்களுக்கான பல திட்டங்களும் இலவசமாகவழங்கப்படுகின்றது. முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் எம்மைப் போன்று அனைத்தினையும்இலவசமாக வழங்காத காரணத்தினால் தான், அந்த நாடுகள் இன்று முன்னேற்றமடைந்துள்ளன. ஆகையினால், இலவசமாக வழங்கும் அனைத்தினையும் நிறுத்தப் போவதுமில்லை, கட்டுப்படுத்தப் போவதுமில்லை.
பொறுப்புடன் புதிய கல்வித்திட்டத்தின் படி கல்வி வழங்குகின்றோம். பட்டதாரிகளாக உள்ளவர்கள் தமக்கான வேலைவாய்ப்பினை வழங்குமாறு முன்னெடுக்கும் போராட்டத்தினை நிறுத்துவதற்காக யப்பான் நாட்டில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு யப்பான் பிரதமருடன் ஆலோசனை நடாத்தப்பட்டுள்ளது.
யப்பானில் தொழில்நுட்ப ரீதியான வேலைகளுக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதனாலும்;,விஞ்ஞான தொழில்நுட்ப பட்டதாரிகள் தேவையாக இருப்பதனாலும், எமது நாட்டில் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு யப்பானில் வேலை வாய்ப்பு காத்திருக்கின்றன.
எனவே, தொழில்நுட்ப ரீதியான கற்கைநெறிகளை மாணர்களுக்குப் கற்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், தொழில்நுட்ப பாடத்தில் உள்ள போட்டித் தன்மையை உணர்ந்து மாணவர்கள் கற்க வேண்டும்.
அந்தப் பாடத்திட்டத்த்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.