சசிகலா புஷ்பா என்றாலே அதிரடிப் பேச்சுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில், அவருக்கு வரும் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்தத் தகவல் பற்றி அவர் இதுவரை உறுதி செய்யவில்லை.
தூத்துக்குடி மேயராக இருந்த சசிகலா புஷ்பா, கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தன்னை அடித்து துன்புறுத்தியாகப் பகிரங்க குற்றச்சாட்டை மாநிலங்களவையில் எழுப்பி நாடாளுமன்றத்தை அதிரவைத்தார். அது மட்டுமன்றி, பதவியை ராஜினாமா செய்யும்படி ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் கூறுவதாகவும், எனவே தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் கதறி அழுதார். அவருடைய இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அனல் வீசியது. இதையடுத்து, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்துகளை அப்போது வெளியிட்டிருந்தனர். அதில், ‘ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசியவர்கள் இல்லை என்ற பிம்பத்தை உடைத்தார் சசிகலா புஷ்பா’ என்பதுதான் ஹைலைட்.
அந்த விவகாரம் ஓய்வதற்குள், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல், அவரை டெல்லி விமான நிலையத்தில், சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாகவும் புகார் எழுந்தது. இப்படியான தொடர் சர்ச்சைகளுடனே இருந்தவர் மீது, அவருடைய வீட்டில் வேலை செய்த பெண் தன்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு கூடியபோது, சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரா பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிடப் போவதாகக் கூறி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது அந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கும், சசிகலா புஷ்பாவின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் அவருடைய கணவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா. இந்த நிலையில்தான் அவருக்கும் டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுடைய பெயர்கள் இடம்பெற்ற திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. டெல்லியில் வரும் 26-ம் தேதி ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா மணக்கப்போவதாக அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையான ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அவர், நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு என்று குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில், நிகில் மற்றும் ஹரி ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. அதில், நிகில் என்பவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “சசிகலா புஷ்பாவிடம்தான் பணியாற்றுகிறேன். திருமண அழைப்பிதழ் பற்றியோ அவர்களுடைய திருமண விவரம் பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துக்கொண்டார். போதிய விவரங்கள் கிடைக்காத நிலையில் நிகிலையும், ஹரியையும் தொடர்புகொள்ள முயற்சித்தும், அவர்களிடம் தொடர்ந்து பேச முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மற்றும் அவருடைய கணவர் லிங்கேஸ்வரா இருவரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்தும் இருவருடைய தொலைபேசி எண்களும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இந்த நிலையில், சசிகலா மற்றும் ராமசாமி திருமணம் குறித்து டெல்லி நிருபர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது ”இருவருக்குமான நட்பு உண்மைதான். ஆனால் அந்த நட்பு, திருமணம்வரை சென்றிருப்பது ஆச்சர்யமளிக்கிறது. ராமசாமியின் மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். வழக்கு விவகாரங்களில் சசிகலா புஷ்பாவுக்கு உறுதுணையாக இருந்தார். இந்த நிலையில்தான் அந்த அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. அவர்களுடைய அந்த திருமணத்தை உறுதிசெய்ய இங்குள்ள நிருபர்களும் ராமசாமி தரப்பைத் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறார்கள்” என்றார்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரனை தொடர்புகொண்டு, “சசிகலா புஷ்பாவைத் தொடர்புகொள்ள முடியவில்லையே? அவரிடம், நீங்கள் பேசினால் நாங்கள் கேட்டதாய்ச் சொல்ல முடியுமா” என்று வினவினோம். அதற்கு அவர், “சசிகலா புஷ்பா எங்கு போகிறார்… என்ன செய்கிறார் என்று எனக்கும் தெரியாது. இருப்பினும், அவரைத் தொடர்புகொண்டு நான் பேசினால் நீங்கள் பேசியதாகத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னபடி அழைப்பைத் துண்டித்தார் சற்றே கோபத்துடன்.
திருமணம் விஷயம் பற்றி மெளனம் கலைப்பாரா சசிகலா புஷ்பா?