சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் சற்று முன்னர் சென்னையில் காலமானார்.
உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் சிகிச்சைகள் பலனளிக்காததால் அவர் நள்ளிரவு 1.30 மணியளவில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில், இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், கடந்த சில நாட்களாக அவர் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தநிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது, அவரது உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் ராமச்சந்திரா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எம்பார்மிங் முடிந்த பின் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும் இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.