தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி கார்தா தெரிவித்துள்ளார்.
கடந்த 1987-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய அமைதிப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் 9 பேரை கொண்ட குழுவினர் அண்மையில் இலங்கை சென்று மீண்டும் இந்தியா சென்றுள்ளனர்.
இந்தப் பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைதிப் படை முன்னாள் அதிகாரியான உன்னி கார்தா,
அமைதிப் படை காலத்தில் விமானத்தில் இலங்கைக்கு அடிக்கடி பயணித்தேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக ஒழுக்கமானவர்கள் என்பதை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கமாட்டேன்.
திருவனந்தபுரம், சூலூர் விமான படை தளங்களில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்துக்கு பயணித்திருக்கிறேன்.
வடக்கு பகுதி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வீசிய ஆபரேஷன் பூமாலையும் நினைவில் இருக்கிறது என்றார்.
இந்தப் பயணத்தின் போது இந்திய அமைதிப் படை முகாமிட்டிருந்த வடக்கு பகுதிகளுக்கும் அக்குழு சென்று பல்வேறு இடங்களைப் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.