பீகார் மாநிலம் சகார்சா மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை நடைபெற்றபோது மருத்துவமனையில் மின்சாரம் இல்லை. அதனால் டார்ச் வெளிச்சத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மயக்க நிலையில் படுத்திருக்கும் பெண்ணின் கையில் அடிப்பட்டுள்ளது.
அவருக்கு மற்றொரு பெண் டார்ச் பிடித்திருக்க அந்த வெளிச்சத்தில் காக்கி உடை அணிந்த நபர் சிகிச்சை அளிப்பதுபோன்று அந்த வீடியோவில் உள்ளது.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இது போன்ற பல சம்பவங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.
ஜெனரேட்டர் வசதி இல்லாத காரணத்தால் மின்சாரம் இல்லாத நேரத்தில் பல மருத்துவமனைகளில் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.