வங்காளதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
பிரேமதாசா மைதானத்தில் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார்.
வங்காளதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் கடைசி பந்தில் அடித்த சிக்சரால் நாடே பெருமிதம் கொள்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை தினேஷ் கார்த்திக் நிகழ்த்தியுள்ளார். சர்வதேச அணியில் இது 5-வது நிகழ்வாகும்
32 வயதான அவர் 8 பந்தில் 29 ரன் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
அதிரடியாக ஆடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணிக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த தொடரில் நாங்கள் உண்மையிலேயே நன்றாக ஆடினோம். எனவே இந்த போட்டியில் வெல்லாமல் போயிருந்தால் அது துரதிருஷ்டம்தான்.
இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக அமைந்தது இல்லை. முஸ்டா பிசுர் வீசிய விதத்தை வைத்து நான் அதிரடியாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக நான் அடித்த ‘ஷாட்’கள் கைகொடுத்தது.
இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமானது. ஆனால் ஒருமுறை கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.