சூதாட்டக் கும்பலைப் பிடிக்க தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு நேர்ந்த சோகம்!

சூதாட்டக் கும்பலைப் பிடிக்கச் சென்ற காவலர் ஒருவரை, குண்டர்கள் துரத்தித் துரத்தி அடிக்கும் வீடியோ காட்சி, இணையதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது.

காவலர்க்கு அடி

பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்டு எனும் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூதாட்டக் கும்பலைச் சேர்ந்த நபர்களைக் கைது செய்ய, காவலர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, நான்கு குண்டர்கள் சேர்ந்து, அவரின் கன்னத்தில் அறைந்தது மட்டுமல்லாமல், சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இச்சம்பவத்துக்குக் கடும் கண்டம் தெரிவித்துள்ள கர்நாடக அமைச்சர் சிவக்குமார், ‘குண்டர்களை வைத்துத் தாக்குவது பா.ஜ.க-வின் கலாசாரம். பா.ஜ.க என்றால் குண்டர்கள்தான். அவர்கள், தங்கள் கைகளில் சட்டம் ஒழுங்கை எடுத்துள்ளனர். மத்தியில் மட்டுமல்ல, அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் உள்ளூர் சபைகளிலும், தங்களின் இயந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை இச்சம்பவம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளது. குண்டர்கள் காவலரைத் தாக்கும் வீடியோ காட்சி, தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.