`ராஜா ராணி’ சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்குபவர், ஷப்னம். பாஸிட்டிவான கேரக்டரிலே பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு, வில்லியாகவும் ஜொலிப்பேன் என நிரூபித்துக் காட்டியவர். தற்போது, விஜய் டிவியின் `கல்யாணமாம் கல்யாணம்’ சீரியலில் மீண்டும் பாஸிட்டிவான கதாபாத்திரத்தில் அசத்திக்கொண்டிருக்கும் ஷப்னத்துக்கு நிஜத்திலும் கல்யாணமாம் கல்யாணம்.
“சன் டி.வியின் `வசந்தம்’ சீரியல்மூலம் சின்னத்திரைக்குள் நுழைஞ்சேன். கொஞ்சம் பிரேக் எடுத்து, `தெய்வமகள்’ சீரியலில் நடிச்சேன். இப்போ, `ராஜா ராணி’ சீரியலில் நெகட்டிவ் ரோல். ஆரம்பத்தில், தேடிவந்த சில நெகட்டிவ் ரோலை தயங்கி மறுத்திருக்கேன். என்னை அன்பான பொண்ணாவே பார்த்த ரசிகர்கள், நெகட்டிவா ஏத்துப்பாங்களான்னு சந்தேகம் இருந்துச்சு. ஆனால், தனிப்பட்ட முறையில் நெகட்டிவ் ரோல் பிடிச்சிருந்தது. ஏன்னா, அதில் நம் திறமையைச் சிறப்பா வெளிப்படுத்த முடியும்.
`ராஜா ராணி’ சீரியல்மூலம் ஆடியன்ஸ் மனசுல `வடிவு’ கதாபாத்திரமா ரிஜிஸ்டர் ஆகிட்டேன். `தெய்வமகள்’ பார்த்துட்டு, மாமியார் கொடுமையை அந்தப் பொண்ணு எப்படித்தான் தாங்குதோனு பரிதாபப்பட்டவங்க, இப்போ `ராஜா ராணி’ பார்த்துட்டு திட்டுறாங்க. நல்லவேளை, `கல்யாணமாம் கல்யாணம்’ வாய்ப்பு கிடைச்சு, ரெண்டு பக்கமும் பேலன்ஸ் பண்ணிட்டிருக்கேன்” எனச் சிரிக்கும் ஷப்னம், தன் வருங்கால கணவர் பற்றி பகிர்கிறார்.
“அவர் பெயர் ஆர்யன். ஐடி கம்பெனி எம்.டி. செம்ம கேரிங் டைப். செப்டம்பர் மாசம் நிச்சயதார்த்தம் நடந்துச்சு. வர்ற ஜூனில் நிக்காஹ். என் குடும்பத்தினர் பார்த்து செலக்ட் பண்ணின மாப்பிள்ளை. நிச்சயதார்த்துக்குப் பிறகு காதலிச்சுட்டிருக்கோம். அடுத்த மாசத்திலிருந்து கல்யாண வேலைகளைத் தீயாக ஆரம்பிக்கணும். அவருக்காக நான் நேரம் செலவிட முடியலை என்பதுதான் ஒரு பெரிய குறையா இருக்கு. ஷூட்டிங் வந்துட்டா சுத்தமா அவரோடு பேச முடியாது. அந்தச் சமயங்களில் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். இருந்தாலும் என்னைப் புரிஞ்சுக்கிட்ட அன்பான காதலன்.
எனக்கு மேக்கப் ரொம்ப பிடிச்ச விஷயம். எப்போ ஷாப்பிங் போனாலும் மேக்கப் சம்பந்தமான பொருள்களை வாங்கித் தருவார். நான் கோபமா இருக்கிறது தெரிஞ்சா, மேக்கப் ஐட்டம் வாங்கிக்கொடுத்து சமாதான தூது விடுவார். ஃபாரின் போய்ட்டு வரும்போதும் மேக்கப் பொருள்களை வாங்கிட்டு வருவார். என் ஃப்ரண்ட்ஸ் எல்லோரிடமும் `கல்யாணத்துக்கு பொக்கே வாங்கிட்டு வராதீங்க. மேக்கப் செட் வாங்கி வாங்க’னு உரிமையா கோரிக்கை வெச்சிருக்கேன்” என்கிறார்.
கல்யாணம் ஆகப்போகுதே… சமையல் பற்றி தெரியுமா எனக் கேட்டால் குறுஞ்சிரிப்புடன், ”எனக்குச் சுத்தமா சமைக்கத் தெரியாமல் இருந்துச்சு. ஆனால், அவருக்காக யூடியூப் பார்த்து சிக்கன் கிரேவி சமைச்சுட்டு, டேஸ்ட் பண்ணி பார்த்தேன். எனக்கே ஆச்சர்யம். செம டேஸ்டா இருந்துச்சு. அதுக்கப்புறம் அவர் எங்க வீட்டுக்கு வரும்போதெல்லாம் சமைக்க ஆரம்பிச்சுட்டேன். நான்வெஜ் சூப்பரா கத்துக்கிட்டாச்சு. வெஜ்லதான் ஒண்ணும் தெரியாது.
என் இன்னோர் உலகம், செல்லப் பிராணிகள். அவங்க இல்லாம இருக்கவே முடியாது. எங்க வீட்டுல மூணு பெட் இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் வாரத்துக்கு ஒருமுறை அவங்களைப் பார்க்கப் போகணும்னு முடிவு பண்ணியிருக்கேன். திருமணத்துக்கு அப்புறமா போகிற வீட்டிலும் ஒரு நாய்க்குட்டி வளர்க்கும் பிளான் இருக்கு. எங்க வீட்டுக்கு நான் பயங்கர செல்லம். பயங்கரமா அடம்பிடிப்பேன். அதனாலே, சின்ன வயசுல நான் என்ன கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துருவாங்க. அப்பாவுக்கு என் மேலே அவ்வளவு அன்பு. அப்பா மாதிரியே எனக்குக் கணவர் அமைஞ்சிருக்கார். அவரும் நான் கேட்குறதையெல்லாம் வாங்கித் தருகிறார். `என் பையனை நல்லா பார்த்துக்கோ’னு மட்டும்தான் என் மாமியார் சொல்லும் ஒரே ஒரு விஷயம். நல்ல மனைவியா, நல்ல தோழியா, நிச்சயமா இருப்பேன்” என்கிறார் ஷப்னம் முகமலர்ச்சியோடு.