கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார் வியாசர்பாடி நாகேந்திரன். ‘ இருபது ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருக்கிறார் நாகேந்திரன். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளது. நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நாகேந்திரனை விடுவிக்க வேண்டும்’ என்கின்றனர் அவரது உறவினர்கள்.
வடசென்னை வட்டாரத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலரது பெயர் அதிர்வலைகளை உருவாக்கும். போலீஸாரின் துப்பாக்கிகளுக்கு வெள்ளை ரவி பலியான பிறகு, வியாசர்பாடிநாகேந்திரனின் பெயர் வலம் வந்து கொண்டிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டான்லி சண்முகம் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் நாகேந்திரன். சிறையில் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் நாகேந்திரன் மீது எட்டு கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ‘ சிறையில் இருந்தபடியே ஸ்கெட்ச் போட்டுத் தந்தார்’ எனச் சிலர் கொடுத்த வாக்குமூலங்கள், நாகேந்திரனுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் சோளிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாகேந்திரனை சந்திக்க முயற்சி செய்தோம். ‘ பரோலில் இருப்பதால் நான் எதுவும் பேச முடியாது’ என மறுத்துவிட்டார். நம்முடைய கேள்விகளுக்கு பதில் வாங்கிக் கொடுத்தார் அவருடைய உறவினர் ஒருவர்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
” பிறந்தது வளர்ந்தது எல்லாமே வியாசர்பாடிதான். தொடக்ககாலங்களில் நல்ல பாக்ஸராக வர வேண்டும் என்பதுதான் ஒரே லட்சியமாக இருந்தது. இதற்காக, சர்மாநகரில் அம்பேத்கர் பாக்ஸிங் கிளப் ஒன்றை உருவாக்கினேன். இந்த கிளப்புக்கு பூவை மூர்த்தியார் உள்பட பலர் வந்து சென்றுள்ளனர். இருபது வருடங்களாக சிறையில் இருப்பதற்கு ஒரே காரணம், ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கு. இந்த வழக்கில் என் பெயரைத் திணித்துவிட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தால், நான் நிரபராதி என விடுதலை ஆகிவிட்டேன். உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில், ‘நான் குற்றவாளி’ என நீதியரசர்கள் தீர்ப்பளித்துவிட்டனர். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்னைக் கைகாட்டிவிட்டனர்”.
வெள்ளை ரவிக்கும் உங்களுக்கு என்ன சம்பந்தம்?
” அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். பாக்ஸிங் கிளப் உருவாவதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம். அவரோடு இணைந்து பாக்ஸிங் பயிற்சிகளில்தான் ஈடுபட்டு வந்திருக்கிறேனே தவிர, குற்றச் செயல்களில் ஈடுபட்டது கிடையாது. இதே தகவலை போலீஸுக்குக் கொடுத்த வாக்குமூலத்திலும் பதிவு செய்திருக்கிறேன். ஆனால், போலீஸாரோ, ‘ நான் வெள்ளை ரவியின் கூட்டாளி’ எனத் திட்டமிட்டு தகவல் பரப்பிவிட்டனர்”.
‘சிறையில் இருந்தபடியே கொலை சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கிறீர்கள்’ என்ற தகவல் பரவுகிறதே?
“இது போலீஸாரால் திட்டமிட்டு பரப்பப்படும் தகவல். ‘பசங்களை கொலை செய்யத் தூண்டுகிறார்’; ‘ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கிறார்’ எனத் தொடர்ந்து அவதூறு பரப்புகின்றனர். இதே காரணத்தை வைத்து என்னைப் பல சிறைகளுக்கு மாற்றிவிட்டனர். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறை மாறுதல் நடக்கிறது. தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் போகாத சிறைகளே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ‘சிறையில் மற்றவர்களுக்கு செல்போன் கொடுக்கிறேன்’ என்ற வழக்கும் பதிந்தார்கள். இந்த வழக்கில் இருந்தும் விடுதலையாகிவிட்டேன். நான் வெளியில் வரக் கூடாது என்பதில் சில அதிகாரிகள் உறுதியாக இருக்கிறார்கள்”.
பகுஜன் சமாஜ் பிரமுகர் தென்னவன் கொலை வழக்கில் 120 பி பிரிவில் உங்கள் மீது வழக்குப் பதிவானதே?
” இந்தக் கொலை வழக்கில் நான் கூட்டுச் சதி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். தென்னவனும் நானும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவரைக் கொல்வதற்கு நான் எப்படித் திட்டம் வகுப்பேன்? சமுதாயத்தின் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறேன். 120 பி என்பது போலீஸ் பெறுகின்ற வாக்குமூலம். போலீஸ் கஸ்டடியில் இருப்பவர்கள் கொடுக்கும் வாக்குமூலம் என்பது கட்டுக்கதைகள்தான்”.
அப்படியானால், வெள்ளை ரவிக்கு பிறகு உங்கள் பெயர் ஏன் பிரபலமானது?
” உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முழுக் காரணமும் காவல்துறைதான். யார் பெயரையாவது சொல்லி அவர்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் யாரையும் நான் சந்தித்தது இல்லை. ‘இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்’ என்ற தவறான கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டார்கள்”.
இருபது வருட சிறை வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம்?
” குடும்பத்தில் உள்ளவர்கள் யாரையும் என்னால் கவனிக்க முடியவில்லை. ‘குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும்’ என்ற ஆசை ஒவ்வொரு தகப்பனுக்கும் இருக்கும். நான் எந்தச் சிறையில் இருக்கிறேன் என்றுகூட என் குழந்தைகளுக்குத் தெரியாது. அந்தளவுக்கு என்னைப் பல சிறைகளுக்கு மாற்றினார்கள். இந்த வருடம் வேலூர் என்றால், அடுத்த வருடம் பாளையங்கோட்டை. குடும்பத்தோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் அதிகப்படியாக இருக்கிறது. சிறையில் நல்ல பெயரை சம்பாதித்தேன். ‘ நீங்கள் வெளியில் போனால் எங்களுக்கு எந்தவிதச் சிரமமும் இல்லை’ என சிறைத்துறை அதிகாரிகளே கூறிவிட்டார்கள். ஆனால், படுத்த படுக்கையாக இருக்கும் என்னை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர். என் மீதுள்ள 5 கொலை வழக்குகளும் கடைசியாகப் போடப்பட்ட ரவி கொலை வழக்கும் புனையப்பட்டதுதான். இத்தனை சம்பவங்களும் நான் சிறையில் இருந்த காலகட்டத்தில் பதியப்பட்டவை. நான் சம்பந்தப்பட்டதற்கான எந்த முகாந்திரங்களும் இல்லை”.
முதல்வருக்கு வைக்கக் கூடிய கோரிக்கை என்ன?
” உடல்நிலையைக் கருத்தில் கொண்டு என்னை விடுதலை செய்ய வேண்டும். கடந்த வருடம் மூன்று நாள் பரோல் விடுப்பு கிடைத்தது. அதில் குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட முடிந்தது. நேற்று என்னுடைய பிறந்தநாள். இருபதாண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் கொண்டு வந்த கேக்கை வெட்டினேன். இதுவரையில் நான் எந்தவிதக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. இருபது ஆண்டுகளாக சிறையிலேயே இருக்கிறேன். நன்னடத்தை அடிப்படையிலாவது அரசு விடுதலை செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு கும்பல், சிறைக்குள்ளேயே என்னைப் படுகொலை செய்ய முயற்சித்தது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, வேறு சிறைக்கு அதிகாரிகள் மாற்றிவிட்டனர். கடந்த ஜனவரி மாதம் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இறக்கும் தருவாயில் இருந்த ஒரு பெரியவர்தான் கல்லீரலை தானமாகக் கொடுத்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறேன். என்னுடைய விடுதலைக்காக உள்துறை செயலர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு மனு கொடுத்திருக்கிறேன். அரசின் கைகளில் என்னுடைய விடுதலை இருக்கிறது” என்றதோடு முடித்துக் கொண்டார்.
அடுத்து, நாகேந்திரனின் வழக்குகளை நடத்திவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜான் பாலிடம் பேசினோம். ” வடசென்னையில் எந்த சம்பவம் நடந்தாலும், அது 20 வருடங்களாக சிறையில் இருக்கும் நாகேந்திரனைத்தான் பாதிக்கிறது. வடசென்னையில் ரவுடிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இளைஞர்களைப் போதைப் பழக்கத்துக்கு ஆட்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் மூலமாக அரங்கேறும் சம்பவங்களுக்குக்கூட நாகேந்திரனை பலிகடாவாக்குகின்றனர். போதை வழக்கு, கொலை வழக்கு, பெண்கள் தொடர்பான வழக்குகளில்கூட இவர் பெயரைப் பயன்படுத்துகின்றனர். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அடுக்கடுக்கான வழக்குகளைப் பதிகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் கொடுக்கும் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
நீண்டகாலமாக சிறையில் இருப்பதால், வெளியில் உள்ள சிலர் இவர் பெயரைப் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு சிறைக் கைதிகள் மேனுவல்படி, மருத்துவரீதியான காரணம்; உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்; நன்னடத்தை விதிகளின்படி நாகேந்திரனை விடுவிக்கப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. அவர் சிறையிலேயே 20 ஆண்டுகால ஆயுள் தண்டனையை அனுபவித்துவிட்டார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். மருத்துவ கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும். இப்படியே சிறையில் இருந்தால் அவருடைய உயிருக்குத்தான் ஆபத்து. குற்றவாளிகளுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதையே அதிகாரிகள் மறந்துவிடுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அவரது பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. நாகேந்திரன், சிகிச்சை பெற்றதற்கான அனைத்து ஆதாரங்களையும் அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். அதை அடிப்படையாக வைத்துத்தான் சென்னை உயர் நீதிமன்றம் பரோலில் வெளியிட உத்தரவிட்டது. சிறையில் இருந்தால் நோய்த் தொற்றுக்கு ஆளாக வேண்டியது வரும் என்றுதான் கவலைப்படுகிறோம். சிறைக் கைதிகளை விடுவிக்கும்போது நாகேந்திரன் விடுதலை ஆவார் என உறுதியாக நம்புகிறோம்” என்றார்.