கொத்தமல்லித்தழை கட்டுக்குள் பார்த்தீனியம்… உஷார்!

பார்த்தீனியம் பார்க்க அவ்ளோ அழகு. வெண் மொட்டுக்கள் கண் திறந்தது போன்ற பூக்களால் தலை அசைக்கும். ஆனால், இந்தப் பார்த்தீனியம் பண்ணும் வேலையோ பயங்கரம். வயல்வெளி, வரப்புகள் என எங்கும் பறந்து விரிந்து வளர்ந்து நிற்கிறது இந்த நச்சு செடி. அப்புறப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து நிற்கும்.

பார்த்தீனியம்

பார்த்தீனியத்தை ஒழிக்கும் அவசியம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒழிக்கும் வேலையோவெற்றிவேந்தன் பார்த்தீனியம் எங்காவது மட்டுமே நடக்கிறது.

இந்தப் பார்த்தீனியம் எங்கிருந்து வந்தது தெரியுமா? இதுவும் அமெரிக்கா நமக்கு அளித்த பரிசுதான். மெக்சிகோ வளைகுடா பகுதியில் இருந்து கோதுமையோடு நம் நாட்டுக்கு அனுப்பப்பட்ட விஷப் பரிசு.

இந்தப் பார்த்தீனியத்தில் உள்ள நச்சுப்பொருள்கள்களின் ஆதிக்கத்தால் நம் நாட்டின் பல நூறு தாவர இனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இவ்வளவு அபாயம் மிகுந்த பார்த்தீனியம் நம் வீட்டு ரசத்தில் மிதக்கிறது என்றால், நினைக்கும்போதே பதறுகிறது அல்லவா?

”எவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்பட்டாலும் பார்த்தீனியம் தன் வில்லத்தனத்தை விடுவதாக இல்லை. கீரைப்பாத்திகளில் வளர்ந்து நம் வீட்டு சமையல் அறைக்கு வந்துவிடுகிறது. குறிப்பாக, இந்தப் பார்த்தீனியம் கொத்தமல்லித்தழையை ஒத்திருப்பதால், கொத்தமல்லிக் கட்டில் தொற்றிக்கொண்டு வந்துவிடுகிறது. நாம் செய்யும் குழம்பு, ரசத்தோடு கலந்து, ஆரோக்கியத்தின் ஆயுளையே ஆட்டம் காணவைத்துவிடுகிறது” என்கிறார் அரசு சித்த மருத்துவர் வெற்றிவேந்தன்.

கொத்தமல்லி தழை

இந்தப் பார்த்தீனிய இலைகளை உட்கொண்டால் என்னவெல்லாம் ஆகும்?

‘‘கால்நடைகள் மேய்ச்சலின்போது இந்தப் பார்த்தீனியத்தை உட்கொண்டால், வாய் மற்றும் குடல் பகுதிகளில் அல்சர் புண்ணை ஏற்படுத்தும். பெரும்பாலும் அவை உண்பதில்லை. ஆனால், பார்த்தீனிய செடிகளைக் கடந்து செல்லும்போது மாட்டின் மடியில் பார்த்தீனிய செடிகள் வருடினாலே ஜூரம் போன்ற பாதிப்புகளைச் சந்திக்கின்றன.

அப்படி இருக்கையில், நாம் உணவோடு உட்கொண்டால் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள். பார்த்தீனியம் செடியில் இருக்கும் பூக்களின் மகரந்தத்தை நுகர்வதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நுரையீரலுக்கு காற்றுச் செல்லும் மூச்சுக்குழல்கள் சுருங்கி விரியும் தன்மையை குறைக்கிறது. இதுவே காலப்போக்கில் அலர்ஜி மற்றும் ஆஸ்துமாவாக உருவெடுக்கிறது.

மஸ்ட் எனும் செல்களின் உற்பத்தியை குறைக்கிறது. இதனாலும் மூச்சுத்திணறல் வரலாம். கொத்தமல்லி மற்றும் கீரை வகைகளுடன் கலந்துவிடும் பார்த்தீனியத்தால், சாப்பிடும் கீரை மற்றும் காய்கறிகளில் இருந்து நமக்கு கிடைக்கும் சத்துக்களும் பாதிக்கப்படுகிறது. காய்கறி மற்றும் கீரைகளைச் சமையலுக்குப் பயன்படுத்தும் முன்பு அதை வெளிச்சத்தில் வைத்து சுத்தம் செய்யுங்கள்.

பார்த்தீனியம்

பார்த்தீனியம் இலைகளை அடையாளம் தெரிந்துக்கொண்டு கவனித்து அகற்றுங்கள். நம் ஆரோக்கியத்தை காக்க நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்கிறார் வெற்றிவேந்தன்.