சென்னை: தமிழக அரசியலில் ஜெயலலிதா எனும் மாபெரும் ஆளுமை இடம்பெறாமலேயே கூட போயிருந்திருக்கலாம்.. மறைந்த நடராஜன் மட்டும் 1989-ம் ஆண்டு மிகப் பெரும் யுத்தம் நடத்தாமல் இருந்தால்!
1989-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. என்னதான் அதிமுகவின் அணிகள் இணைந்தாலும் திமுகவுடன் மல்லுக்கட்ட முடியாது என்பதை உணருகிறார் ஜெயலலிதா.
1989-ம் ஆண்டு இதே மார்ச் 15-ந் தேதியன்று ஜெயலலிதா ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார். அதுதான் அரசியலைவிட்டே ஒதுங்குவது என்பது. அரசியலைவிட்டு விலகி ஹைதராபாத்தில் செட்டிலாக முடிவு செய்கிறார்.
இதற்காக தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதினார். இந்த கடிதத்தையும் அதன் நகல்களையும் சபாநாயகரிடமும் பத்திரிகைகளிடமும் ஒப்படைக்கச் சொல்லி கார் ஓட்டுநரிடம் கொடுத்து விடுகிறார் ஜெயலலிதா. இவ்வளவுதான் ஜெயலலிதா அன்று அறிந்தது.
மறுநாள் பத்திரிகைகளில் தமது ராஜினாமா கடிதம் வரவில்லை என்பதை அறிந்து பதறுகிறார் ஜெயலலிதா. கடிதம் கொடுத்துவிட்ட ஓட்டுநரை விசாரிக்கிறார் ஜெயலலிதா. அப்போதுதான் தெரிகிறது, இது நடராஜனின் சித்து விளையாட்டு என்பது.
ஆம் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை கண்காணிக்க உளவாளியை நியமித்திருந்தார் நடராஜன். அவர் மூலமாக ஜெயலலிதா ஏதோ சில கடிதங்கள் கொடுத்துவிடுகிறார் என்பதை தெரிந்து கொண்டார் நடராஜன்.
ஜெயலலிதாவை வைத்து காரியங்கள் சாதிக்க போட்ட திட்டம் பாழாகிறதே என பதைபதைத்து அடியாட்களை ஏவி ஜெ.வின் ஓட்டுநரிடம் இருந்து கடிதங்களை பறித்து வீட்டு பீரோவில் பதுக்கி வைத்தார் நடராஜன்.
நடராஜனின் இந்த செயலால் கொதித்து போன ஜெயலலிதா அவரது வீட்டுக்கு போய் மல்லுக்கட்டுகிறார்.
இந்த மோதல் ஆட்சியில் இருந்த திமுக மேலிடத்தின் கவனத்துக்குப் போகிறது. உடனடியாக நடராஜனை கைது செய்து ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதங்களை கைப்பற்றி பகிரங்கப்படுத்தியது திமுக.
ஆனால் காலத்தின் கோலம் என்னவாயிற்று தெரியுமா? ஜெயலலிதா அரசியல் துறவறம் எனும் முடிவை கைவிட்டார்; ஜெயலலிதாவின் அதிதீவிர நம்பிக்கையாளராக நடராஜன் உருவெடுத்தார்.
ஆம் ஜெயலலிதாவின் ராஜகுருவாக தமிழகம் அப்போதுதான் நடராஜனை அறிந்து கொண்டது. காலந்தோறும் ஜெயலலிதா- நடராஜன் அரசியல் ஆடு புலி ஆட்டம் தொடர்ந்தது; ஜாம்பவான்களைக் கொண்ட திமுக ஜெயலலிதாவுடன் போராடி தோற்ற கதைகளும் நடந்தேறின.