முதன்முறையாக மாட்டிக் கொண்ட கோத்தபாய!

கப்பம் பெறும் நோக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஐ.நா மனித உரிமை பேரவையில் முறையிடப்பட்டுள்ளது.

கப்பம் பெறும் நோக்கத்திலேயே எனது சகோதரர் உட்பட 11 கடத்தப்பட்டமதாக ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான நேரத்தின் போது இலங்கை தொடர்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நான் எனது சகோதரன் ஜெகன் தியாகராஜாவுக்காக நீதி கேட்டு இந்த சபைக்கு வந்திருக்கின்றேன். 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம்திகதி இலங்கை கடற்படையின் அதிகாரி சம்பத் முனசிங்கவினால் எனது சகோதரர் கடத்தப்பட்டார்.

எனது சகோதரரை மீளப்பெறுவதற்காக அனைத்து விதமான இராஜதந்திர பொறிமுறைகளையும் எனது குடும்பம் பயன்படுத்தியது. ஆனால் இராணுவ ரீதியான சித்திரவதைகளையே எதிர்கொண்டோம்.

எங்களது தனிப்பட்ட நிதி நிலைமை காரணமாக சகோதரரை மீளப்பெறுவதற்காக ஒரு மில்லியன் கப்பம் கொடுத்தோம். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. துப்பாக்கிமுனையில் பணத்தை பெற்றுக்கொண்டு எனது தாயை தள்ளிவிட்டு சென்றனர்.

2012 ஆம் ஆண்டு விசேட குற்றவிசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வாவும் அவரது குழுவும் எனது வீட்டுக்கு வந்து எனது சகோதரன் காணாமல் போகவில்லை என்றும் அவர் கடத்தப்பட்டார் என்றும் தெரிவித்தனர்.

அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய வசந்த கருணாகொட, சம்பந் முனசிங்க, ஹெட்டிராய்ச்சி, தசநாயக்க உள்ளிட்டவர்கள் எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியதாக குறிப்பிட்டனர். கப்பம் பெறுவதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் கூறினர்.

இவ்வாறு கடத்தப்பட்ட 11 பேரும் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டு மகாவலி ஆற்றில் வீசப்பட்டதாக நீதிமன்றத்தில் சந்தேக நபர் ஒருவர் தெரிவித்தார். அண்மையில் நான்கு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த பத்து வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமது பிரஜைகளையே இவ்வாறு சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து எமது அன்புக்குரியவர்கள் மீள்வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பேரவையின் தலைவரிடம் கோருகின்றோம் என்றார்.

போர்க்குற்றச்சாட்டுக்கு எதிராக இலங்கை முகங்கொடுத்துள்ள நிலையில், முதன்முறையாக கோத்தபாயவுக்கு எதிராக தமிழ் பெண்ணொருவர் நேரடி சாட்சியம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.