ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டுமென கட்சிக்குள்ளேயே கருத்து வலுத்துவரும் நிலையில், தனது பிறந்தநாளான எதிர்வரும் 24ஆம் திகதி சர்ச்சைகளுக்கு ஐ.தே.க. தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தலைமைப் பதவியைத் துறக்கும் அறிவிப்பை அவர் பிறந்தநாளன்று வெளியிடுவார் என்றும், கட்சியின் எதிர்காலம் சம்பந்தமாக விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என்றும் சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 1994ஆம் ஆண்டு முதல் ஐ.தே.கவின் தலைவராகவுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐ.தே.க. பாரிய தோல்வியைத் தழுவியதால் அவருக்கு எதிராக கட்சியிலும் தேசிய அரசிலும் எதிர்ப்புகள் வலுப்பெற்றன. பிரதமர் பதவி விலகவேண்டுமென சு.க. போர்க்கொடி உயர்த்தியிருந்தது.
எனினும், ஜனாதிபதியுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதால் அந்நடவடிக்கை கைவிடப்பட்டது.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவேண்டுமென எழுச்சியடைந்த எதிர்ப்புகளைப் பிரதமரால் தணிக்கமுடியாது போனது.
பொது எதிரணியால் பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐ.தே.கவின் சில உறுப்பினர்கள் கையெழுத்திடும் வரை அவருக்கு எதிரான எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் 24ஆம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். பிறந்தநாளில் விசேட அறிவிப்புகள் சிலவற்றை பிரதமர் விடுக்கவுள்ளதுடன், கட்சியின் தலைமைப் பதவியையும் புதியவரிடம் கையளிக்கவுள்ளார் என்று ஐ.தே.கவின் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.