உங்கள் மகனுக்கு கொடுத்து அனுப்புவேன்: கணவன் இறுதிச் சடங்கில் மனைவி சபதம்!

தமிழகத்தில் இராணுவ பணியின் போது, இறந்த கணவனைப் பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தில் பணியாற்றி வந்த இவருக்கு பொற்செல்வி என்ற மனைவியும், கிருஷ்ணபிரியா, கிருஷ்ணகாந்த் என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 17-ஆம் திகதி இரவு கிருஷ்ண மூர்த்தி மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டம், தேவ்லாலி ரோட்டில் இயங்கிவரும் ராணுவ முகாமில் தனது பட்டாளியன் வீரர்களுடன் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று அவர் மீது விழுந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இங்கு வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நேற்று விமானம் மூலம் தமிழ் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பின் பிற்பகல் 2.20 மணிக்கு அவரது சொந்த ஊரான ராங்கியம் கிராமத்துக்குக் அவரது உடல் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன், தேசியக் கொடி போர்த்தப்பட்டு, 7 குண்டுகள் வீதம் 3 சுற்றுகளாக 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் அவரின் மனைவி பொற்செல்வி கணவரைக் கண்டு கதறி அழுததுடன், தன் கணவனின் கன்னத்தில் முத்தமிட்டு அமைதியாக உறங்குங்கள் உங்கள் மகனையும் ஒரு ராணுவ வீரனாக ஆக்குவேன்.

உங்களது உடையை மகனுக்குக் கொடுத்து ராணுவத்துக்கு அனுப்புவேன் என கணவரின் உடல்மீது சபதம் எடுத்துக்கொண்ட சம்பவம் ராணுவ அதிகாரிகளை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் மெய்சிலிரிக்க வைத்துள்ளது.

ஒரு இராணுவ வீரரின் இறப்பிற்கு வெளிமாநிலத்திலிருந்து பல அதிகாரிகள் வந்திருந்த நிலையில், உள்ளூரில் இருந்து மாவட்ட ஆட்சியரோ, ஆர்.டி.ஒ, டி.ஆர்.ஒ போன்ற அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாதது மிகுந்த வேதனையளிப்பதாக அக்கிராம மக்கள் கூறியுள்ளனர்.