நியூயார்க்: அமெரிக்க வனவிலங்கு அருங்காட்சியகத்தில் இரண்டு கால்களில் மனிதர்களைப் போல கொரில்லா நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன் என்றாலும், இன்னும் குரங்குகள் பெரும்பாலும் இரண்டு கைகள் மற்றும் கால்களைப் பயன்படுத்தியே நடப்பதுண்டு.
இந்நிலையில், அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் மனிதர்களைப் போல இரண்டு கால்களில் நடந்து பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது லூயிஸ் என்ற கொரில்லா குரங்கு.
அமெரிக்காவின் பிலாபெல்டியா வனவிலங்கு அருங்காட்சியகத்தில் வாழ்ந்து வருகிறது லூயிஸ். 18 வயது நிரம்பிய இந்தக் கொரில்லா மேற்கத்திய லோலேண்ட் வகையைச் சேர்ந்தது. ஆறு அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்டது.
சமீபத்தில் இது இரண்டு கால்களில் மனிதர்களைப் போல நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதனைப் பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்த மக்கள், லூயிஸைப் பார்ப்பதற்காகவே அதிகளவில் இந்த வனவிலங்கு அருங்காட்சியகத்திற்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், இது மிக அரிதானதல்ல என்கின்றனர் அந்தக் கொரில்லாவைப் பார்த்துக் கொள்ளும் அருங்காட்சியக ஊழியர்கள்.
‘தன் இரண்டு கை நிறைய உணவுகளை வைத்திருந்தாலோ அல்லது நடக்கும் தரை சகதியாக இருந்தாலோ இப்படி இரண்டு கால்களால் கொரில்லா நடக்கும். ஏனெனில் அது தன் கைகளை சகதியாக்கிக் கொள்ள விரும்பாது” என அவர்கள் கூறுகின்றனர்.