தஞ்சாவூர் தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் நடராசன் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் இது!
எம்.ஜி.ஆர் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் பாட்டுப் புத்தகத்தை பள்ளித் தோழன் ஒருவன் வைத்திருக்க… அதை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார் நடராசன்.
‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என்ற வாசகத்துடன் படத்தின் கதைச் சுருக்கம், பாட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்வி சிறுவனாக இருந்த நடராசன் மனதில் எழுந்தது. ‘
ஜெனோவா’ படத்தைப் பார்த்து விடை தெரிந்துகொள்ள நினைத்தார். அப்பா மருதப்பா மண்ணையாரிடமும், தாய் மாரியம்மாளிடமும் பணம் கேட்கத் தயக்கம். காரணம், பொருளாதாரச் சூழல்.
அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் நடராசன் படிப்பார். ‘‘கணக்குப் பிள்ளை வேலைக்கா போகப் போறே… படிச்சுக் கிழிச்சது போதும், படுடா!’’ எனச் சொல்வார், நடராசனின் பாட்டி அப்பாயி.
நடராசன் உடல்நிலை மீதான அக்கறை அல்ல அது. கிடைக்காத மண்ணெண்ணெய் வீணாகிறதே என்கிற கவலைதான் காரணம். மண்ணெண்ணெய் செலவுக்கே கணக்குப் பார்க்கும் குடும்பத்தினர், சினிமாவுக்குப் போவதற்குப் பணம் தருவார்களா? ஆனாலும், ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்விக்குப் பதில், வெண் திரையில்தானே இருக்கிறது.
எப்படியோ பணத்தைத் திரட்டி, தஞ்சை யாகப்பா தியேட்டரில் ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்தார் நடராசன். காட்டுப்பகுதியில் துவண்ட நிலையில் எம்.ஜி.ஆர் தள்ளாடி, ஊர்ந்து செல்வார்.
இன்னொரு பக்கம் கதாநாயகி ‘எனை ஆளும் மேரி மாதா… துணை நீயே தேவத் தாயே!’ என்று பாடி வருவார். திடீரென இருவர் மீதும் வெளிச்சம் பாய… பிரிந்திருந்த இருவரும் இணைவார்கள்.
மகிழ்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் வராமல், இருவரின் கண்கள் மட்டும் பேச… படம் முடியும். ‘பிரிந்தவர் கூடும்போது பேச்சு வராது’ என்பதை, அந்தச் சின்ன வயதில் நடராசன் தெரிந்துகொண்டார்.
‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என சிறுவயதில் கேள்வி எழுப்பிய நடராசன், சசிகலாவை ஜெயலலிதாவால் பிரிந்திருந்தார். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இருவரும் சில நேரங்களில் சந்தித்துக்கொண்டதாகப் பேச்சுகள் எழுந்தன.
ஆனால், அவர்கள் அப்படிச் சந்திப்பு நடந்ததற்கான அதிகாரபூர்வ படங்கள் ஏதும் வெளியாகவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தபிறகு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா தள்ளப்பட்டார்.
அந்த நேரத்தில் சிறை வளாகத்தில் இருந்த நீதிமன்றத்தில் சசிகலாவைப் பார்த்த நடராசன், கண்ணீர் சிந்தினார். அங்கே இருவரும் பேச முடியவில்லை. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என நிழலுக்கு நேர்ந்தது, அன்றைக்கு நிஜத்திலும் அரங்கேறியது.
1973-ம் ஆண்டு நடராசனின் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தது அன்றைய முதல்வர் கருணாநிதி. நடராசனும் சசிகலாவும் 1990-ம் ஆண்டு வரையில் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வந்தார்கள்.
சசிகலா போயஸ் கார்டனில் குடிபெயர்ந்த பிறகும் அங்கேதான் நடராசனும் இருந்தார். ஜெயலலிதாவோடு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் இருந்து 1991-ம் ஆண்டு நடராசன் வெளியேறினார்.
”நடராசனுடன் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது” என ஜெயலலிதா அறிவித்தார். அதனால் நடராசன் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் வசித்து வந்தார். இதனால் சசிகலாவும் நடராசனும் அதன்பிறகு பிரிந்தே இருந்தார்கள்.