சிறுநீர் கழிப்பதில் அலட்சியம் காட்ட வேண்டாம்!

இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள் தான். இந்த சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது சிறுநீரை அவசியமானபோது வெளியேற்றாமல் இருப்பது தான். வெளியிடங்களில் சிறுநீரை கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. சிறுநீர்ப்பை நிரம்பி இருக்கும்போது கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், சிறுநீர்ப்பை உள்ள அடிவயிற்றில்  கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி சிறுநீரகத்தையே செயலிழக்க வைத்துவிடும்.

சிறுநீர்

அதுமட்டுமின்றி சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால் மனரீதியான சிக்கல்களும் உருவாகின்றன. அதாவது சிறுநீரை வெளியேறும்வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனச்சிதறல் உண்டாகிறது. சிறுநீரை அடக்கி வைத்திருக்கும் நபர்களுக்கு மனநோய்கள் அதிகம் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகாமல் இருக்க தேவைப்பட்ட வேளைகளில் உடனடியாக இயற்கை உபாதைகளை கழிப்போம். இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை. அப்படி வெளியிடங்களில் கழிப்பிட வசதிகள் இல்லை எனும் பட்சத்தில் நீர் அல்லது நீர்ம ஆகாரங்களை எடுத்துக்கொள்வதைக் குறைத்துக் கொள்ளலாம்.