சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்றையதினம்(21-03-2018) புதன்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் நுழைந்த இளைஞர் குழு ஒன்று வைத்தியசாலை பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.இதன் போது வைத்தியசாலையின் இரும்புக் கதவு, மேசை ஆகியன சேதமடைந்துள்ளன.அட்டகாசத்தில் ஈடுபட்ட இந்த குழு, வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இன்று(21-03-2018) காலை வைத்தியசாலை சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களை மிரட்டியமைக்காக வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் அச்சுதனினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…..நேற்றையதினம்(20-03-2018) செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் சாவகச்சேரி நகரை அண்டிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் வீதியில் கிடந்துள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியசாலைக்கு தெரியப்படுத்திய நேரத்தில் அம்புலன்ஸ் இல்லாமையை காரணம் காட்டியதில் இந்த விஷமச் செயல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, குறித்த சமயம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அம்புலன்ஸ் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.