வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் வெற்றியை அனைவரும் கொண்டாடிய போது, நான் நிலைகுலைந்து நின்றதாக இந்திய அணி வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின.
இப்போட்டியின் போது இந்திய அணி வீரர் விஜய் சங்கர் 18-வது ஓவரின் போது சில பந்துகளை அடிக்காமல் தவறவிட்டார். இதனால் ரசிகர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
அதன் பின் ஒரு வழியாக தினேஷ் கார்த்திக் போட்டியை வெற்றிகரமாக முடித்து வைத்தாலும், சமூகவலைத்தள கேலிகளிலிருந்து விஜய் சங்கர் தப்பவில்லை.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், சமூகவலைத்தளங்களில் என்னை குறித்து வரும் கேலிகளைப் பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் வரும் கேலிகள் பற்றி கவலைப்படாதீர்கள் என்று வரும் பரிவு குறுஞ்செய்திகள் தான் தனக்குப் பிரச்சினையாக உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் நான் அந்தத்தருணத்திலிருந்து விடுபட்டு மேலே செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது, இவ்வகைக் குறுஞ்செய்தி என் மேல் பரிவு காட்டுவதற்காக அனுப்பப்பட்டாலும் அது எனக்கு உதவாது, அது வேலை செய்யாது.
அன்றைய நாள் எனக்கு சரியாக அமையவில்லை, அதிலிருந்து மீளவதற்கு கடுமையாக போராடி வருகிறேன். இறுதிப் போட்டியின் வெற்றியை அனைவரும் கொண்டாடிக் கொண்டிருந்த போது, நான் என்னை நினைத்து மனம் உடைந்து போயிருந்தேன்.
எனக்கு கொடுக்கப்பட்ட அந்த வாய்ப்பை, நான் வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும், ஆனால் முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.