”ரஜினியின் ‘2.0’ ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்?” – முழு விபரம்

தமிழ்சினிமாவில் வழக்கமாக முன்னணி ஹீரோக்கள் ஒரேசமயத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டு இருப்பார்கள். பெரும்பாலும் இயக்குநர்கள் ஒரே நேரத்தில் இரு படங்களை இயக்கமாட்டார்கள். இயக்குநர் ஷங்கரும் அப்படித்தான்!. ஒருபடத்தை ரிலீஸ் செய்தபிறகே அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலையில் இறங்குவார். ஆனால் தற்போது ரஜினி நடித்த ‘2.0’ ரிலீஸாவதற்கு முன்பே, கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கும் வேலையில் பரபரப்பாக இறங்கிவிட்டார், ஷங்கர். சினிமா ஸ்டிரைக் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், விரைவில் வேலை நிறுத்தம் முடிந்து சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டவுடன் ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு துவங்கிவிடும்.

2 point 0

ரஜினியின் ‘2.0’ படத்தைத் தயாரித்துவரும் லைக்கா நிறுவனம்தான், கமல் படத்தையும் தயாரிக்கிறது. ஏற்கெனவே ‘2.0’ படத்துக்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் சில விநியோகஸ்தர்கள் முன்பணம் கொடுத்து வைத்திருந்தனர். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது தள்ளிப்போனது. ரஜினி நடித்த ‘காலா’ படத்தை வெளிமாநில விநியோகஸ்தர்களுக்கு தர லைக்கா முடிவெடுத்து, தனுஷ் தயாரிப்பில் உருவான ‘காலா’ படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை  லைக்கா நிறுவனமே பெற்றது. அதன்பின்பு ஏப்ரல் 27-ஆம் தேதி ‘காலா’ ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தனர். ‘காலா’ டீஸர் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பையும் பெற்றது. அதேசமயம்,  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எகிறக் காத்திருக்கும் ‘2.0’ படத்தின் டிரெய்லர் லீக் ஆனதைப் பார்த்து, ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கெனவே மும்பை மற்றும் துபாயில் நடந்த ‘2.0’ படத்தின் நிகழ்ச்சிகள் ‘கபாலி’ விமான விளம்பர ரேஞ்சுக்குப் பேசப்படவில்லை என்பதில் கொஞ்சம் வருத்தத்தில் இருந்த ஷங்கருக்கு, டிரெய்லர் லீக் ஆன விஷயம் இன்னும் வருத்தத்தைக் கொடுத்தது. ரஜினியின் ‘2.0’ படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நீண்டு கொண்டே இருப்பதால்தான், ‘காலா’ படத்தை வெளியிடும் பணியில் இறங்கி இருக்கிறது, லைக்கா. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 16-ஆம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்து இருப்பதால், எப்போது வேலை நிறுத்தம் முடியும் என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது. கவுன்சிலின் ஸ்டிரைக் அறிவிப்பால், ‘காலா’ ரிலீஸ்தேதி தள்ளிப்போகும் சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது. ‘காலா’விற்கான தாமதம் சரி. ரஜினியின் ‘2.0’ படம் தாமதம் ஆவதற்குக் காரணம் என்ன?

2.0 - ரஜினி

கி.மு – கி.பி மாதிரி ‘2.0’ படத்தை ‘பாகுபலி’ ரிலீஸுக்கு முன், ‘பாகுபலி’ ரிலிஸுக்குப் பின் எனப் பிரிக்கலாம். ஷங்கர் ‘2.0’ படத்தின் பாதி பகுதியை ‘பாகுபலி’ பட வெளியீட்டுக்கு முன்பே எடுத்து முடித்துவிட்டார். ஆனால், ‘பாகுபலி’ ரிலீஸுக்குப் பிறகு அதிலிருந்த பிரம்மாண்டம் ஷங்கரை யோசிக்க வைத்தது. அதன்பின் நடத்தப்பட்ட ‘2.0’ படத்தின் காட்சிகளில் பிரம்மாண்டம் கூடுதலாக சேர்க்கப்பட்டது. ஒருவழியாக ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்ஸன் நடிக்கவேண்டிய காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டார், ஷங்கர்.

முக்கியமான காட்சிகளில் மிரளவைக்கும் பிரமிப்பை ஏற்படுத்த, லண்டனில் இயங்கிவரும் டபுள் நெகட்டிவ் விஷூவல் எஃபெக்ட்ஸ் (double negative visual effects) நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். ‘நாங்கள் எப்போது கிராஃபிக்ஸ் பணிகள் திருப்தியாக முடிந்தது என்று சொல்கிறோமோ, அதன் பிறகு பட ரிலீஸ் தேதியை முடிவு செய்துகொள்ளுங்கள்’ என்ற நிபந்தனையுடன் சி.ஜி பணிகளில் இறங்கியது, அந்த நிறுவனம். பாரம்பரியமிக்க இந்த நிறுவனத்தின் தலைமையகம் லண்டனில் இருக்கிறது. உலகெங்கும் இந்நிறுவனதின் கிளைகள் இருக்கின்றன, இந்தியாவிலும் இருக்கிறது. ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘எக்ஸ் மஷினா’, ‘பிளேடு ரன்னர் 2049’ உள்பட பல படங்களுக்காகப் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற நிறுவனம் இது. இப்போது புரிகிறதா? ‘2.0’ படத்தின் ரிலீஸ் வருடம், மாதம், தேதி, ரஜினியிடமோ, லைக்காவிடமோ, ஷங்கரிடமோ சத்தியமாக இல்லை. டபுள் நெகட்டிவ் நிறுவனத்திடமே இருக்கிறது!