உலகத்திலேயே முதன்மையான பயங்கரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே விளங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட பேரழிவுகளுக்கு அந்த இயக்கமே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது அவர் இந்த விடயத்தினைக் கூறியுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் எண்ணிக்கை, இனக்கலவரத்தின்பின் விடுதலைப் புலிகளினால் அழிக்கப்பட்டவை தொடர்பான கேள்விகளை, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிடம் அவர் கேட்டிருந்தார்.
அதற்கு அவர் கூறியது ”திருகோணமலையில் மொத்தமாக 1,046 நிறுவனங்கள் இருந்தன. அதில், 104 நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அன்றைய காலத்திலிருந்த நெருக்கடியான நிலைமை மற்றும் சிவில் நிர்வாகம் சீர்குலைந்திருந்தமையால், இழப்பீடுகளை மதிப்பிடமுடியவில்லை” என்றார்.
மேலும் “விடுதலைப் புலிகள் இயக்கம்தான் உலகிலேயே முதன்மையான பயங்கரவாத இயக்கமாகும். அப்படிப்பட்ட இயக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இழப்பீடுகளை அரசாங்கங்கள் மதிப்பீடு செய்திருக்கவேண்டும். ஆனால் எந்தவொரு அரசாங்கமும் அதனைச் செய்யவில்லை.
அத்துடன் கடந்த 30 வருடங்களில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கு, புலிகளே பொறுப்புக் கூறவேண்டும். எனினும், இராணுவத்தினர் மனித உரிமைகளை மீறிவிட்டதாக ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை, பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. அவற்றை வைத்து, எந்தவொரு அரசாங்கமும் மதிப்பீடு செய்யவில்லை” என்றார்.