மலச்சிக்கல் பிரச்சனையில் அவதி படுகிறீர்களா… இதை சாப்பிடுங்க…

உலகில் பல பேருக்கு மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபட்டு வருகிறார்கள். அதே சமயம் அனைவரும் ஒரு முறையாவது இதனால் அவஸ்தைபட்டிருப்போம்.ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்து குறைவான டயட், உடலுழைப்பு இல்லாமை போன்றவை தான் முக்கிய காரணம்

மலச்சிக்கல் பிரச்சனையை குறிப்பிட்ட மலமிளக்கிகள், நார்ச்சத்து சப்ளிமென்ட்டுகள் மற்றும் மலமிளக்கும் பொருட்களைக் கொண்டு விடுபடலாம். அதே சமயம் குறிப்பிட்ட சில உணவுகள் மலச்சிக்கலைத் தடுக்கும்.

உங்களை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுவிக்கும் உணவுகள் இதோ

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலின் வழியே செரிமானமாகாத உணவுகள் தடையின்றி செல்ல உதவி, குடலியக்கத்தை சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

சூடான பானங்கள்

காபி அல்லது டீ போன்றவற்றை சூடாக குடியுங்கள். பானங்களை சூடாக குடிக்கும் போது, அது குடலியக்கத்தைத் தூண்டி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். மேலும் பானத்தை சூடாக குடித்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, செரிமானம் சிறப்பாக நடைபெற்று, மலம் எளிதில் வெளியேறும்.

வாழைப்பழம்

மலச்சிக்கலில் இருந்து விடுப்பட வாழைப்பழம் தான் மிக சிறந்த உணவு அதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால், அது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளித்து, மலத்தை வெளியேற்ற உதவும். பச்சை வாழைப்பழத்தில் உள்ள ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச், கரையக்கூடிய நார்ச்சத்து போன்று செயல்பட்டு, குடலின் செயல்பாட்டை மென்மையாக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

தண்ணீர் இறுகிய மலத்தை இளகச் செய்யும். மேலும் எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் அமிலம், செரிமான மண்டலத்தில் வேலை செய்யும். இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து குடிக்கும் போது, அது மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுவிக்கும்.இரவு நேரத்தில் இந்த எலுமிச்சை ஜூஸ் மலத்தை இளகச் செய்து, காலையில் எழுந்ததும் உடனே வெளியேற்றச் செய்யும்.

மாம்பழம்

பார்த்ததுமே அனைவரது வாயில் இருந்தும் எச்சில் ஊறும் ஓர் பழம் தான் மாம்பழம். இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இது மலச்சிக்கலையும் விடுவிக்கும். ஆனால் மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடித்தால், அதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலத்தை இளகச் செய்து எளிதில் வெளியேற்றும்.

திணை

தானியங்களுள் ஒன்றான திணையில் மற்ற தானியங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இந்த திணையை ஒருவர் காலை உணவாக உட்கொண்டால், அது மலச்சிக்கல் தொல்லையில் இருந்து விடுவித்து, மலத்தை எளிதாக வெளியேற்ற செய்யும்.

கிவி

கிவி பழத்தில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதுவும் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.