அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு விக்கி கோரிக்கை!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகர் என்ற அரசியல் கைதி, 2008ஆம் ஆண்டு தொடக்கம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையை விதித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 15ஆம் நாள், ஆனந்தசுதாகரின் மனைவி யோகாராணி நோயினால் மரணமானார்.

இதனால், அவர்களின் இரு குழந்தைகளும்  தாயையும் இழந்து, தந்தையின் அரவணைப்பையும் பெற முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளன.

இந்தநிலையில், தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு, ஆனந்த சுதாகரின் இரு குழந்தைகளும், சிறிலங்கா அதிபருக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தனர்.

இதையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், நேற்று சிறிலங்கா அதிபருக்கு இதுதொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அதேவேளை, அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு, பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபரிடம், கோரும் கருணை மனுவில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் கிளிநொச்சியில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.