போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரினை தொடர்ந்து பருகுபவர்களுக்கு எலும்பு சார்ந்த நோய்த்தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபையின் மூத்த இரசாயனவியலாளர் எஸ்.சரவணன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, எம்மில் பலர் இன்றைய காலத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரையே அதிகளவில் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இதனைப் பயன்படுத்துபவர்கள் உடல் பாதிப்புக்கு உள்ளாகி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
முன்னைய காலத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரைத் தயாரிக்க எஸ்.எல்.எஸ் சான்றிதழ்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது சுகாதார மருத்துவ அதிகாரிகளின் சான்றிதழ்கள் இருந்தாலே அனுமதியைப் பெறக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.
அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆண்டுதோறும் புதிப்பிக்கப்படுகின்றன. அதனால் ஆண்டில் ஒரு தடவை மட்டுமே தண்ணீர் தொழிற்சாலையின் தண்ணீர் வளம் தொடர்பில் ஆய்வு செய்யப்படுகின்றது.
போத்தலில் அடைக்கப்படும் போது தண்ணீரில் உள்ள மூலக் கூறுகள் அனைத்தும் உறிஞ்சி எடுக்கப்படுகின்றன. அதில் அசிட் தன்மை காணப்படுகின்றது.போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீர் கசப்பு தனியாக இருக்கின்றது.
இவ்வாறான குடிதண்ணீரை தொடர்ச்சியாக பொதுமக்கள் பருகுவதால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மூலக் கூறுகள் கிடைக்காமல் போகின்றது. இதனால் அவர்களுக்கு எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. தொடர்ச்சியாக போத்தலில் அடைக்கபட்ட குடிதண்ணீரைப் பருகுபவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும் – என்றார்தேசிய நீர் வழங்கல் சபையின் மூத்த இரசாயனவியலாளர் எஸ்.சரவணன்.