`கணவர் இறப்புக்காகப் பார்க்க வேண்டாம்; போராட்டத்தை நடத்துங்கள்’ – தினகரனுக்கு உத்தரவிட்ட சசிகலா

கணவர் இறந்து இருந்தாலும் பரவாயில்லை காவிரி விஷயம் என்பது டெல்டா மக்களோட வாழ்வாதார பிரச்னை. அதில் அவர்களின் ஜீவாதாரம் அடங்கியிருக்கிறது அதனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் என சசிகலா கூறியதாகத் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டி.டி.வி.தினகரன், தஞ்சாவூரில் வரும் 25-ம் தேதி மாபெரும் உன்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் சசிகலா கணவர் நடராசன் உடல் நலக் குறைவால் இறந்துவிட அவரின் இறுதிச் சடங்குக்காகச் சசிகலா 15 நாள்கள் பரோலில் வந்திருக்கிறார். நேற்று நடராசன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அறிவித்திருந்தபடி உண்ணாவிரதப் போராட்டம் நடக்குமா என ஆதரவாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என நேற்று இரவே தினகரன் தெரிவித்தார். பெரிய மாநாடுகள் மட்டுமே நடத்தப்படும் தஞ்சாவூர் திலகர் திடலில் உண்ணாவிரதம் நடத்துவதற்கு அனுமதி வாங்கியுள்ளனர். அந்த இடத்தில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த ஏற்பாட்டுப் பணிகளைத் தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இது குறித்துப் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு எதையும் செய்ய மாட்டார்கள். மத்திய அரசுக்குப் பயந்து, இங்கு இருக்கிற மைனாரிட்டி அரசு அவர்களுக்குத் துணையாகத்தான் செல்வார்கள். அவர்களுக்கு ஆட்சியை ஓட்டினால் போதும். 37 எம்.பி-க்களும் மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பி.ஜே.பி அரசை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவர் இறந்து இருந்தாலும் பரவாயில்லை காவிரி விஷயம் டெல்டா மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை அதில் அவர்களின் ஜீவாதாரம் அடங்கியிருக்கிறது. அதனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் எனச் சசிகலா கூறியுள்ளார். எனவே,   பிரமாண்டமாகப்  போராட்டம் நடைபெறும் எனத் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.