பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இரண்டு முஸ்லிம் மௌலவிகள் மீது தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்ற தினத்திற்கு முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியில், கண்டியில் வன்முறைகள் நடைபெற்ற போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இரண்டு மௌலவிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
2018-03-05 பிற்பகல் 4.59 மணி என காணொளியில் நேரம் பதிவாகியுள்ளதுடன், திகண – ஹிஜ்ராபுர ஜூம்மா பள்ளிவாசலில் இருந்தவாறு இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜே.டி.எஸ். அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மொஹமட் நிஷாம்டீன் மற்றும் மொஹமட் ரமீஸ் ஆகிய மௌலவிகளே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஜே.டி.எஸ் அமைப்பு கூறியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதலுக்கு அதிரடிப்படையினர் பங்களிப்பு வழங்கியதாக ஏற்கனவே வெளியான தகவலை 32 நொடிகள் ஓடக் கூடிய இந்த புதிய காணெளி உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
திகன பிரதான வீதி நெடுகிலும் இந்த மௌலவிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயரை குறிப்பிட விரும்பாத ஒருவர் தம்மிடம் கூறியதாகவும் ஜே.டி.எஸ் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மௌலவிகள் சில தினங்களின் பின்னர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான நடந்த வன்முறைகளை மேற்கொண்ட அடிப்படைவாதிகளுக்கு, அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நேரடியாக உதவியுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.