சசிகலா தங்கியிருக்கும் வீட்டில் என்ன நடக்கிறது?

கணவரின் இறுதிச்சடங்குக்காக வந்த சசிகலா, தஞ்சாவூரில் அவருக்குச் சொந்தமான இல்லத்தில் தங்கியிருக்கிறார். அங்கு போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படவில்லை. கட்சி நிர்வாகிகள் சிலர் வீட்டுக்கு வெளியே நிற்கின்றனர். சில மீடியா லைவ் வாகனத்தோடு காத்துக் கிடக்கின்றனர்.

சசிகலா

சசிகலா தன் கணவர் நடராஜன் இறந்ததையடுத்து அவரின் இறுதிச் சடங்குக்காகப் பெங்களூரு சிறையிலிருந்து 15 நாள்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். அவர் தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள அவருக்குச் சொந்தமான இல்லத்தில் தங்கியிருக்கிறார். நேற்று கணவர்  நடராசன் உடல் அருகேயே நின்றுகொண்டிருந்ததால் சோர்வாக இருந்தவர், காரியங்கள் முடிந்ததும் ஓய்வெடுப்பதற்காக அறைக்குச் சென்றுவிட்டாராம். இன்று காலை 6 மணிக்கு மேல் வீட்டின் வெளிப்புறத்துக்கு வந்து கொஞ்சம் நேரம் ரிலாக்ஸாக நடந்தாராம்.

நடராசன் உடல் அருகே இருந்த சசிகலாவை பார்ப்பதற்கும் பெரும் கூட்டம் முண்டியடித்ததால் அவ்வப்போது தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அதனால் வீட்டில் உள்ள செடிகள் மற்றும் தொட்டிகள் சேதமடைந்தது. இந்த வீட்டை ரொம்ப நேசித்து கண்போல் கண்காணித்தார் கணவர். அவருக்கு செடிகள் என்றால் உயிர். அது இப்படி அலங்கோலமாகக் கிடக்கிறது. உடனே சுத்தம் செய்யச் சொல்லி உறவினர்களுக்கு உத்தரவிட்டாராம். சுத்தம் செய்யும் பணியில் பெண்கள், ஆண்கள் எனப் பலர் ஈடுபட்டிருந்தனர்.

சசிகலா

வீட்டுக்கு உள்ளே சுத்தம் செய்யும் பணிக்குச் சென்ற பெண்களுக்கு உடன் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. பாதுகாப்புக்குப் போலீஸார் நிறுத்தப்படவில்லை. அதனால் சசிகலா தரப்பினரே தனியார் செக்யூரிட்டிகள் சில பேரை நியமித்துள்ளனர். அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டுக்கு உள்ளே சசிகலா தங்கியிருக்கும் அறையில் டி.டி.வி.தினகரன்  நீண்ட நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். திவாகரன் மன்னார்குடியில் உள்ள புகழ்மிக்க ராஜகோபால சுவாமி கோயிலில் திருவிழா நடந்துகொண்டிருப்பதால் அதற்கு மண்டகப்படி கொடுப்பதற்காகச் சென்றுவிட்டாராம். அவர் மகன் ஜெயானந்த்தும் வெளியே சென்றுவிட்டாராம்.

உள்ளே சசிகலா ஆலோசனையில்  ஈடுபட்டிருந்ததால் நடராசன் அண்ணன் சாமிநாதன், தம்பி பழனியப்பன் நீண்ட நேரமாக வெளியே போர்டிக்கோவிலேயே அமர்ந்திருந்தனர். இளவரசி மகன் விவேக் ஜெயராமன் வீட்டுக்கு வெளியே உள்ள சாலையில் நின்றுகொண்டு தன் ஆதரவாளர்களுக்கும் மற்றும் ஜெயா டிவி ஊழியர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியபடி இருந்தாராம். 15-க்கும் மேற்பட்ட கார்கள் வீட்டைச் சுற்றி நிற்கின்றன. கட்சி நிர்வாகிகள் பலர் எப்படியாவது சசிகலாவை பார்த்து சில வார்த்தைகள் பேசிவிட வேண்டும் என காத்துக்கிடக்கின்றனர். ஜெயா டிவி உட்பட சில வடநாட்டு சேனல்களும் அதன்  ஊழியர்களும் லைவ் வாகனத்தோடு வீட்டுக்கு முன் காத்துக் கிடக்கின்றனர். மொத்தத்தில் பரபரப்புடனே காட்சியளிக்கிறது சசிகலா தங்கியிருக்கும் அந்த 11-ம் நம்பர் இல்லம்.