என் மகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டாயே..!” – குற்றவாளிக்கு நடுரோட்டில் தண்டனை கொடுத்த தாய்

பாலியல் குற்றவாளியை நடுரோட்டில் வைத்து பெண் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், காவல்துறை கஸ்ட்டடியில் உள்ள ஒரு பாலியல் குற்றவாளியை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, அந்த குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், குற்றவாளியைப் பார்த்ததும் ஓடிச் சென்று, அவரை அடிக்கத் தொடங்கினார்.

மாறி மாறி கன்னத்தில் அறையவே,  தாக்குதலை சமாளிக்க முடியாமல் குற்றவாளி நிலைகுலைந்துபோனார். போலீஸார், அந்தப் பெண் அடிப்பதைத் தடுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. அங்கு கூடியிருந்த பொதுமக்களில் சிலர், இந்தச் சம்பவத்தை விடியோவாகப் பதிவுசெய்துள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் தனது மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதை நினைத்துக் கடந்த சில நாள்களாகவே, அந்தப் பெண் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மன வேதனை தாங்காத அவர், குற்றவாளியைப் பார்த்ததும் தாக்கியுள்ளார்.

இருப்பினும், அவர் யார் என்பதுகுறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சமீப காலமாக, இந்தூர் பகுதியில் அதிகமாக பாலியல் குற்றச் சம்பவங்கள் நடந்துவருகின்றதாகவும், இது தொடர்பாக இதுவரை ஒரு பெண் உட்பட மூன்று பேரை கைதுசெய்துள்ளதாகவும், போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில், தொடர்ந்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், நடுரோட்டில் வைத்து தைரியமாக பாலியல் குற்றவாளியைத் தாக்கிய அப்பெண்ணுக்கு, சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.