ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா செல்ல, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.
ரஷ்யாவுக்கு சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளராக சென்ற நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அமெரிக்காவின் ஹுஸ்டன் நகருக்கு செல்ல ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்துக்கு சென்றபோதே, அவரை விமானத்தில் ஏற்ற மறுத்ததன் ஊடாக இந்த அனுமதி மறுப்பு முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,தான் ஹுஸ்டன் நகருக்கு செல்ல முற்பட்டவேளை, எமிரேட்ஸ் விமான சேவையானது தன்னை அமெரிக்கா விமானத்தில் ஏற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக கூறி விமானப் பயணத்துக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் தான் அமெரிக்கா செல்வதில் இருந்து தடுக்கப்பட்டமைக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க எவ்வித காரணங்களும் தனக்கு கூறப்படவில்லை எனவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ ரஷ்யாவுக்கு சுயாதீன தேர்தல் கண்கானிப்பாளராக சென்றிருந்த நிலையில், அமெரிக்கா செல்ல அனுமதி கிடைக்காததால் அவர் தற்போது இலங்கை நோக்கி திரும்பியுள்ளார்.